162 • தமிழின எழுச்சி
ஏறத்தாழ 142 தேசிய இனங்களைக் கொண்ட உருசியாவிலும், 50 தேசிய இனங்களைக் கொண்ட சீனாவிலும், உருசிய மொழியையும், சீன மொழியையும் வைத்தே, அந்நாட்டு மக்களை ஒன்றுபடுத்தி யிருக்கிறார்கள் என்பதையும், இந்தியாவிலும் ஏறத்தாழ 1700 மொழிகள் பேசப்படுகின்றன என்பதையும், இந்தியத் தேசிய மொழிகள் 14லிலும் கூட, 380 வகையான தாய்மொழிகள் உள்ளடங்குகின்றன என்பதையும், இருப்பினும் இந்தியமொழி ஒன்றையே இணைப்பு மொழியாகக் கொண்டு இந்தியத் தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்த முனைகின்றார்கள் என்பதையும் நோக்குகிறபொழுது, மக்கள் இன ஒருமைப்பாட்டிற்கு மொழி எத்துணை முகாமையானது என்பது நன்கு விளங்கும். இம்முகாமையான மொழியுணர்வைத் தவிர்த்து விட்டுத் தமிழினத்தை வேறு எந்த உணர்வாலும் ஒன்றுபடுத்தி விட முடியாதென்பது, நம் அசைக்க முடியாத கொள்கை, தொழிலாளர், உழவர்களைத் தட்டியெழுப்பி, ஒரு பொருளியல் போராட்டத்தையோ, புரட்சியையோ உருவாக்குவதென்றாலும் கூட, நம் தாய்மொழி உணர்வைக் கொண்டே அதைச் செய்ய இயலும்.
இவ்வடிப்படையில், எவ்வாறாகப் பார்ப்பினும், தமிழின உரிமைகளை மீட்காமல், நம் நாட்டை அரசியல், பொருளியல், குமுகாயவியல் அடிப்படையில் விடுதலை பெறச் செய்யாமல், எந்தவகையிலும் தமிழின முன்னேற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளுதல் வேண்டும். அதற்கிடையில் நாம் செய்யும் எந்த முயற்சிக்கும் அதுவே அடிப்படையாக அமைய வேண்டுவது மிகமிக இன்றியமையாதது.
❖
தென்மொழி சுவடி - 21, ஓலை - 9 சூன்-சூலை 1985