பக்கம்:தமிழின எழுச்சி.pdf/165

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

164 • தமிழின எழுச்சி

ஒன்றி விடுகிறார்கள். இவர்களல்லாமல், இயக்கங்களைக் கட்டிய இளைஞர்களுக்குப் பிறகுதான் தெரிகிறது, இயக்கம் என்றால் என்ன? அதைக் கட்டமைப்பதும், நடத்திச் செல்வதும், நிலைப்படுத்து எவ்வளவு தொல்லைகள் வாய்ந்தன என்பது.

அண்மையில் நம் இயக்க ஈடுபாடு கொண்ட இளைஞர் ஒருவர் திருமணம் செய்துகொண்டார். திருமணம் செய்துகொள்ளும் முன்னர் அவர் முனைந்த முனைப்புகளையும், ஈடுபாடுகளையும், கருத்து முழக்கங்களையும், துடிப்புகளையும் சொல்லி முடியாது. அவ்வளவு வேக உணர்ச்சியுடன் ஈடுபட்ட அவர், திருமணம் செய்துகொண்டபின் அதிலேயே அழுந்திப்போனார். இப்பொழுது ஆளையே பார்க்க முடிவதில்லை. இத்தகைய வேறு சிலர் திருமணத்திற்குப் பின்னர்ச் சில காலம் வரை ஈடுபட்டிருந்து, ஓரிரு குழந்தைகள் பிறந்த பின்னர் காணாமற்போய் விடுகின்றனர். ஓயாமல் பேசுபவர்கள், உணர்வெழுச்சி கொண்டவர்கள், செயல் செய்யத் துடிப்பவர்கள் ஆகியோரில் பலர், இவ்வாறு சாவிகளாகவும், பதர்களாகவும், முளையிலேயே கருகிப் போகிறவர்களாகவும், கால வெள்ளத்தால் அடித்துச் செல்லப் படுபவர்களாகவும் போய்விடுவதைப் பல நிலையிலும், பலவகையிலும் கண்டிருக்கலாம்.

தம் பெயரைத் தூயதமிழாக மாற்றிக்கொண்டவர் ஒருவர், அப்படி மாற்றிக்கொள்ளாமல் பலவாறு மொழியடிமையும், இன அடிமையும் மூடநம்பிக்கைகளையும் கொண்டவர் பலரைப் பாட்டாலும் எழுத்தாலும் உரையாலும் ஓங்கி உரக்கக் கண்டித்துக்கொண்டிருந்த அவர், தம் திருமண அழைப்பிதழில், தம் பழைய வடமொழிப்பெயரை, ஆங்கிலத் தலையெழுத்துகளுடனும், தம் தந்தையார் மற்றும் உறவினர் பெயர்களைச் சாதிப் பட்டங்களுடனும் அச்சிட்டுத் தம் கொள்கை மெலிவை உறுதிப் படுத்திக்கொண்டார்! ஒருவர் ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து, பட்டம் பெறுகிறவரை மிக எளிய முறையிலேயே உடுத்து உண்டு, அழுத்தமான பொதுவுடைமைக் கொள்கையும், தூயதமிழ் ஆர்வமும் கொண்டிருந்தவர், ஏதோ ஒரு நல்வாய்ப்பினால், ஓர் உந்துவண்டி முதலாளியின் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதுடன், நல்ல உயர்வூதியம் வரும் வைப்பகப் பணிகிடைத்தவுடன், தம் இளமைப் பருவத்தின் அனைத்து உணர்வுகளையும் இழந்து, தம் கொள்கைகளையும் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, இக்கால் 'பழைய கருப்பனே கருப்பன்' என்று தம்மை நிலைப்படுத்திக்கொண்டார். தூயதமிழில் அழகிய புதுப்பெயரை வேண்டி விரும்பிக்கேட்டுப் பெருமிதத்துடனும் வெற்றிக்களிறு போலும் உணர்வுடனும் சூட்டிக்கொண்டு, உலவிய