பக்கம்:தமிழின எழுச்சி.pdf/171

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

170 • தமிழின எழுச்சி

களைந்து விடுகிற உணர்வே நம்மிடம் உள்ளது. பொதுத் தொண்டைப் பெரும்பாலார் ஒரு பொழுதுபோக்குணர்வாகவே கருதுகின்றனர். ஓர் இடத்தில்கூட நீண்டநேரம், மணிக்கணக்காக, நாள் கணக்காக, ஒரு கொள்கையையோ செயலையோ நோக்கி உரையாடுகின்ற அல்லது அறிவுநிலையில் தருக்கமிடுகின்ற உணர்வு வெகுசிலர்க்கே உள்ளது.

கருத்துரையாடல், அல்லது கலந்து தருக்கமுறையில் ஆராய்தல் என்றால் நம்மில் ஒருவரை ஒருவர் எதிர்த்துக்கொள்கிறோம்; சண்டையிட்டுக் கொள்கிறோம்; சட்டெனப் பகைத்துக் கொள்கிறோம். கருத்து வேறுபாடு என்பதை மனமாறுபாடு என்னும் பொருளில் எடுத்துக் கொள்கிறோம். அதற்குத் தலையாய காரணம் நாம் நம்மைத் தவிர வேறு ஒருவரையும் நம்ப மறுக்கிறோம். நம்மில் மூவர் நால்வர் சேர்ந்தால். வேறு ஒருவரின் கருத்துகளைப்பற்றி, ஆய்வு நோக்கில் பேசிக் கொள்ளாமல், அந்த ஆளைப்பற்றியே திறனாய்வு செய்யத் தொடங்குகிறோம். நம் உணர்வால், நம் கோணத்தில் பிறரை எடைபோட விரும்புகிறோம். பிறர் உணர்வு எத்தகையது, அவரின் கருத்து எப்படிச் சரியானது அல்லது தவறானது என்னும் ஆராய்வே நமக்கு வேண்டும். இவ்வுணர்வு உண்மையான தொண்டுணர்வுக்கு ஏற்றதில்லை.

இன்னொரு குறைபாடும் நம்மிடை உண்டு. ஒருவரை நாம் நேரிடையாக அறிந்து கொள்ள முனையாமல், பிறர் வழியாக அறிந்து கொள்கிற மனப்பாங்கே நம்மிடத்தில் மிகுதியும் உள்ளது. புறங் கூறுதலை வரவேற்கிறோம்; நம்மிடையும் அந்த உணர்வை வளர்த்துக் கொள்கிறோம். 'குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல்' என்னும் குறளில் பல உண்மைகள் உணர்த்தப் பெறுகின்றன.

நாடுதல் என்பது ஆராய்தல். முதலில் நமக்கு ஒருவரிடம் உள்ள குண நலன்களையே ஆராய்ந்து அறிந்து கொள்கிற உணர்வு வேண்டும். குற்றங்கள் நம் அனைவரிடமும் உறுதியாக உண்டு. எனவே, பிறரின் குணங்களையே முதலில் ஆராய்ந்து அறிதல் வேண்டும். குற்றங்களை ஆராயக்கூடாது. அவ்வாறு ஆராய்ந்து அறிந்து கொள்ளக்கூடிய குற்றங்கள் இருந்தாலும், முதலில் குணங்களையே ஆராய்ந்து அளவிட்டு கொண்டு, பிறகு குற்றங்களையும் ஆராய்ந்து அளவிட்டுக் கொண்டு, அவற்றுள் எது மிகுதியான அளவில் உள்ளதோ, அதையே பெரிதாக எடுத்துக் கொள்ளுதல் வேண்டும் என்பதே இத்திருக்குறளின் கருத்தாகும். பெரும்பாலும் நம்மில் மிகப்பலர் இவ்வாறு செய்வதில்லை. முதலில் ஒருவரிடம் இருக்கின்றதாகத் தாம் கருதிக்கொள்ளும் குற்றங்களையே துருவித் துருவி ஆராயத்தொடங்கி விடுகின்றனர்.