பக்கம்:தமிழின எழுச்சி.pdf/184

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 183

நிலைக்கு மாறான நிலைகளோ இத்தகைய சிலருக்கு அவர்களின் துணைவியர்களே பெரும் உதவியாளர்களாக யிருந்திருக்கின்ற செய்தி களோ இல்லாமல் இல்லை. எதிலும் விலக்கான பொது உண்மைகளைப் போலவே இதிலும் உண்டு. இருப்பினும் பொதுத் தொண்டு நிலைகளில் முற்கூறப்பெற்ற வரலாறுகளே மிகுதி.

பொதுத் தொண்டர்களுக்கும், பொது நிலையில் பெரிதும் ஈடுபாடு கொண்ட அறிஞர்களுக்கும் இத்தகைய சூழல்கள் அமைவதற்குப் பெண்களுக்கிருக்கும் இயல்பான குடும்பப் பற்றும், பொது நல ஈடுபாட்டுக் குறைவுமே அடிப்படைக் காரணங்களாக இருக்கின்றன. இவையன்றி இன்னோர் இயற்கையான உயிர் இயங்கியல் காரணமும் உண்டு. பொது நிலையில் முழு ஈடுபாடு கொண்டு இயங்கும் பேரறி ஞர்களுக்கும், தொண்டர்களுக்கும், கொள்கையாளர்களுக்கும், குடும்ப ஈடுபாட்டைக் குறைப்பதற்கே இத்தகைய சூழல்களை இயற்கை உருவாக்குகிறது என்பதை நாம் உய்த்து உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். மனைவிமார்களின் ஒன்றாத உணர்வுகளே, இத்தகை யோரைப் பொதுவுணர்வுக்குப் பெரிதும் உந்தித் தள்ளுகின்றன. மனைவி கணவனுக்குப் பெரிதும் ஒத்த உணர்வுடன் இயங்கும் நிலை யில், அவளின் அன்பிணைப்பும் அழகுக் கவர்ச்சியும் இவர்களின் வினைத்திறனைக் குறைத்தும் குடும்ப விழைவை மிகுத்தும் விடாலா மன்றோ? திருக்குறளில் உள்ள பெண்வழிச் சேறல்' என்னும் நடப்பில் அதிகாரமும், அதில் உள்ள,

மனைவிழைவார் மாண்பயன் எய்தார்; வினைவிழைவார்
வேண்டாப் பொருளும் அது. (901)

மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்தல் இன்று. (904)

அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ணேவேல் செய்வார்கண் இல். (909)

என்னும் திருவாய்மொழிகளும், குடும்பத்தில் பெண்பால் தொடர்பு எந்த அளவில் அற வினைகளுக்கும் புறவினைகளுக்கும் தடையாக இருக்கும் என்பதை நன்கு உணர்த்துகின்றன.


தென்மொழி சுவடி 22, ஓலை 1, 2, 3, 4, 5.
நவம்பர் 1985 - ஏப்பிரல் 1986