பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 207
நூல்கள் எழுதி இத்தமிழுலகு பயன்பெறத் தந்து சென்றார். ஆனால் பன்மொழிப் புலவரோ ஏறத்தாழ நூற்று எண்பது நூல்களுக்குப் பேராசிரியராக விருந்து அறிவாளுமை செய்து மறைந்தார். இருவரும் இன்னும் எழுதி முடிக்க வேண்டிய அறிவு நூல்கள் பல உள. அம் முடிக்கப் பெறா நூல்கள் இவ்விருவர் பாங்கிலிருந்தும் நமக்குக் கிடைக்கப் பெறாமற் போனது நம் போகூழே! நாமேதாம் அவர்கள் தம் பணியில் முற்றுப் பெறாமற் சென்றதற்கு முழுக் காரணர்களாகப் பொறுப்பேற்றுக் கொள்ளுதல் வேண்டும். இது நமக்கு மட்டுமன்று. நம் மொழிக்கும் இனத்திற்கும் நாட்டிற்கும் நாமே ஏற்படுத்திக் கொண்ட பெரும் பேரிழப்பாகும்! எதிர்காலம் நம்மைப் பொறுத்துக் கொள்ளாது.
நம் பெருமைக்குரிய பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார் அவர்கள் பாவாணர் மறைந்து எட்டாண்டுகள் கழித்து மறைந்துள்ளார். பாவாணர் மறைந்த பின்னை நாமும் நம் அரசும் விழித்துக் கொண்டிருந்தாலும் நம் பன்மொழிப் புலவரை இன்னும் சில காலத்திற்குப் புரந்து பேணி அவர் எச்ச அறிவாட்சியை நீட்டித்திருக்க வழி செய்திருக்கலாம். அதன்வழி அவர் அறிவால் இம்மொழிக்கும் இனத்திற்கும் நாட்டிற்கும் கிடைத்திருக்க வேண்டிய அறிவுக் கருவூலங்களைக் கிடைக்கச் செய்திருக்கலாம். ஆனால், நாம்தாம் போற்றிக் கொள்ள வேண்டிய பெரும்புலமையை மண்ணில் போட்டுப் புதைத்துவிட்டு, அப்புதைமேடையில் நின்று மறைந்துபோன புலவர்க்குப் போற்றுதலுரையும், விழா வேடிக்கையும் செய்து நிறைவுறுவோர்கள் ஆயிற்றே! என் செய்வது?
இனி, பன்மொழிப் புலவர்தம் வாழ்வியல் நிலைகளை நன்றியுடன் நினைந்து வியந்து போற்றுதல் செய்வோம்.
புலவரவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல் வாய்மொழி எனும் சிற்றூரில் 24.06.1907-ஆம் ஆண்டு பிறந்தார். பெற்றோர் முத்தம்மாளும் காசிநாதரும் ஆவர். சிறு அகவைப் பொழுதிருந்தே தமிழுணர்வும் தமிழின உணர்வும் அவருள் காழ்கொண்டிருந்தன. எதையும் விரைந்து கற்கும் ஆர்வமும், கற்றவற்றை நினைவில் இருத்திக் கொள்ளும் திறமும் இயற்கையாகவே வாய்க்கப் பெற்றவராகையால், அவர் தமிழுடன் ஆங்கிலம், சமசுக்கிருதம், மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளையும் பள்ளிப் பருவத்திலேயே எளிதாகக் கற்றுத் தேர்ந்தார். தொடக்கத்தில் ஆங்கிலத்திலேயே மதிதகு இளங்கலை ஆங்கிலப்பட்டம் B.A.(Hon's) பெற்றார். பின்னர்த் தமிழில் முதுகலை