பக்கம்:தமிழின எழுச்சி.pdf/211

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

210 • தமிழின எழுச்சி

சிறு தொகைகளே! இவர் நூல்களை வெளியிட்டுக் கொடுத்த பதிப்பகங்களால் இவர் பெரிதும் ஏமாற்றப்பட்டிருக்கிறார். இவர் நூல்களை வெளியீடு செய்து கொள்ளையடித்த சில பதிப்பகங்கள் இவர்க்கு அறிவுக் கூலியாகக் கொடுத்தவை 100, 200 உருபாக்களும், மிகச் சில வெளியீட்டு நூல்களுமே! இவரின் கழக, ஆங்கிலத் தமிழ்க் கையகராதிக்கு, அப்பதிப்பகத்தார் இவருக்குக் கொடுத்த தொகை வெறும் 300 உருபாவே என்றால், நம் நாட்டு வணிக நூல் வெளியீட்டகங்கள் புலவர்களின் வறுமையைப் பயன்படுத்திக் கொண்டு, புலமையை விலை பேசும் நிலையினை என்னவென்று சொல்வது? இங்கு எப்படி அறிவு வளரும்? அறிஞர்கள் எப்படி வாழமுடியும்? கொள்ளையில் தலையாய கொள்ளை அறிவுக்கொள்ளையே! நம் பன்மொழிப் புலவர் அப்பாத் துரையார் அவர்களின் தனிநிலை வாழ்க்கை மிக மிக இரங்கத்தக்கது என்பதைத் தெரிவிக்க மிகமிக வருத்தப்படுகிறோம். இவரின் மூளையை உறிஞ்சிக் கொழுத்த வெளியீட்டாளர்கள் இன்றைக்குப் பெருஞ் செல்வம் படைத்த பெரும் முதலாளிகளாய் உள்ள நிலையில், இவர் மறைந்த காலை வீட்டாருக்கு இவர் வைத்துச் சென்றது ஏறத்தாழ ஐந்து இலக்க உருபா கடன் சுமையே என்றால், இவரின் அவல வாழ்க்கையை எண்ணி எவ்வாறு கண்ணீர் வடிக்காமல் இருக்க முடியும்?

இவர் உயிரோடிருக்கும் பொழுது இவருக்குக் கிடைத்த பெருமைகள் பல. ஆனால் அவை வெறும் பெருமைகளும் பட்டங்களும் பாராட்டுகளுமே! 1961இல் சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இருந்துள்ளார். தமிழகப் புலவர் குழு உறுப்பினராக இறுதிவரை இருந்துள்ளார். 1970இல் பாரீசில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் சிறப்புறுப்பினராகக் கலந்து கொண்டார். பின் மதுரையில் நடந்த 5-ஆவது உலகத் தமிழ் மாநாட்டில், தமிழக முதல்வர் முன்னிலையில் இந்தியத் தலைமையமைச்சரால் பொற்கிழியும் கேடயமும் வழங்கிச் சிறப்பிக்கப் பெற்றார். 1973-இல் “செந்தமிழ்ச் செல்வர்” பட்டமும், சேலம் தமிழகப் புலவர் குழுக் கூட்டத்தில் “சான்றோர்” பட்டமும் “தமிழன்பர்" பட்டமும் பெற்றார். 1981 சனவரி 26இல் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் சார்பில் “கலை மாமணி” பட்டமும் நம் பன்மொழிப் புலவர்க்கு அளிக்கப்பெற்றது. 1983ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு இவர்க்கு திரு.வி.க. விருதையும் தங்கப் பதக்கத்தையும் கொடுத்துப் பெருமைப்படுத்தியது. அதே ஆண்டு மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம் இவருக்குப் “பேரவைச் செம்மல்” என்ற பட்டத்தையும் அளித்தது ஆனால் இவை எல்லாவற்றினும் பெருமைப்படக் கூடிய செய்தி இங்கிலாந்து ஆக்சுபோர்டு