திருக்குறள் தமிழின நல நூலே!
பழந்தமிழினத்தின் ஒட்டுமொத்த அறிவியல் வெளிப்பாடாகத் தோன்றிய நூல் திருக்குறள்! ஏறத்தாழ ஓராயிரம் ஆண்டுக்காலம் ஆரியத்தால் மறைக்கப்பட்டும் புறக்கணிக்கப்பட்டுக் கிடந்த நூல் அது. கி.பி.8ஆம் நூற்றாண்டில் எழுந்த பார்ப்பனப் பரிமேலழகர் பார்ப்பனீயச் சார்பாகவும், அதை மனு(அ) தர்ம நூலுடனும், கௌடில்லியரின் அர்த்த சாத்திரத்துடனும், வாத்சாயனாரின் பாலியல் விளக்க காமநூலுடனும் இணைத்துக் காட்டியும் எழுதிய உரைக்குப் பின்னர் தாம், அது மதிக்கப் பெற்றுப் பாராட்டுப் பெற்றது.
இதுவரை ஏறத்தாழ நூற்று இருபதுக்கும் மேற்பட்ட உரைகள் அதற்கு எழுதப் பெற்றிருந்தாலும், இன்னமும் அதன் உண்மைப் பொருள்கள் முழுவதுமாக வெளிப்படுத்தப் பெறவில்லையென்றே சொல்லுதல் வேண்டும். இன்றும் அதை அறிஞர்கள் பலரும் பல்வேறு கோணங்களில் திறனாய்வு செய்த வண்ணமாகவே உள்ளனர். இந்நிலைகள், புறநிலையில் திருக்குறளுக்கு ஒருவாறு பெருமை செய்வனவாகவே கொண்டாலும், அதன் அகநிலையில், உள்ள மெய்ப்பொருள் தன்மைகளை இன்னும் எவரும் சரிவர மதிப்பிட்டுக் கூறினார் இல்லை என்றே கருதுதல் வேண்டும்.
அதைப் பலரும் ஒரு தர்மநூல் என்றும், அறநூல் என்றும், வாழ்வியல் நூல் என்றுமே பல கோணங்களில் விளக்கம் செய்து எடுத்துக்காட்டி வருகின்றனர். அதுபோலவே அதைத் தம் தம் சமயம் சார்ந்ததாகக் காட்டிப் பெருமைப்பட்டுக் கொள்வாரும் இன்றும் உளர். இன்னும், இக்கால் வணிக நோக்கம் கொண்டார் ஒருசிலர் அறிந்தோ, -