பக்கம்:தமிழின எழுச்சி.pdf/27

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

26 - தமிழின எழுச்சி


இத்துணைச் சிறப்பு வாய்ந்த திருக்குறள் தோன்றி இற்றைக்கு ஈராயிரமாண்டுகள் முடிவுறுகின்றன. எனினும் திருக்குறளின் பெருமை இன்னும் உலகுக்குச் சரிவர உணர்த்தப் பெறவில்லை . இதற்குத் தலையாய கரணியம் என்ன? திருக்குறள் தோன்றி இரண்டாயிரம் ஆண்டுகள் ஆயினும் தமிழன் அதனைத் தானே உணர்ந்தானல்லன். திருக்குறளை வாழ்வியல் நூலாக இன்னும் அவன் கொண்டு விட வில்லை . இவன் இதனைச் சரிவர உணரத் தலைப்படுவானானா இவன் தன்னைச் சமயத்தால் ஓர் 'இந்து' என்றும், கிறித்துவன் என்றும் முசுலிம் என்றும் பௌத்தரை என்றும் சமணன்" என்றும் கூற ஒருப்படுவானோ? திருக்குறள் கூறும் இறைமாட்சியை இவன் உணர் வானானால் இவன் பிற சமயங்களை ஏறெடுத்துப் பார்ப்பானோ? திருக்குறள் கூறும் அறநெறிகளைக் கற்றுணர்ந்திருந்ததால் இவன் வாழ்வியல் மடமைகள் விலகியிருக்காவோ? பொய்ம்மை கழலாதோ? மனப்பூட்டு திறவாதோ? மக்கள் யாவரையும் ஓரினமாகவும், ஒரே நிறையாகவும் கொள்ளானோ?

திருக்குறளைக் கல்லாத பெரியோரும், தலைவரும், அரசியல்காரரும் எவருளர்? எனினும் அவர் எல்லாரும் குலப்பற்றுக் கொள்ளாதவர் என்று சொல்ல முடியுமோ? சமயவெறி ஏறாதவர் என்று உரைக்கத் தகுவரோ? ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்னும் பொன்னுரையைச் செயல்படுத்தத் தக்கவராக அவர் நடந்து கொள்வரோ? ஒருவனை வஞ்சித்தொழுகும் மதியிலராக நடப்பரோ? பொய்கூறிப் பிழைத் தொழுகும் பேதையுள் பேதையராகத் திரிதருவரோ? கிறித்துவமும், இசுலாமும், பௌத்தமும், சமணமும் சாற்றும் அறவுரைகளை எல்லாம் அவ்வச்சமயத்தார் கடைப்பிடித்தொழுக, தமிழர் மட்டும் ஏன் தம் சமயநூல் எனத்தகும் திருக்குறளின் நெறிப்படாதவராகத் தட்டுக் கெட்டுத் தடுமாறித் திரிதரல் வேண்டும்? ஏனெனில் இவரெல்லாரும் திருக்குறளை ஓர் இலக்கியமாகப் பயின்றவரே அன்றி, திருக்குறள் ஓர் இலக்கிய நூல் என்ற அளவில் ஒப்புக்கொண்டவரேயன்றி - அஃதோர் அறநூல், வாழ்வியல்நூல், மாந்தவினத்திற்கே ஒளிநல்கும் மறைநூல் என்றொப்பி ஓதியவரும் அல்லர்; ஓர்ந்து உணர்ந்தவருமல்லர். திருக்குறளைப் பயின்று 'புராணிகரின்' பழங்கதை நிகழ்ச்சிகளைப் போல் பற்பல கூட்டங்களிலும், மேடைகளிலும் நகைச்சுவையாகவும், சொற்சுவையாகவும் பாடிப் பணம்பறித்து வருவோர், தம் வாழ்க்கையில் திருக்குறள் கூறும் மெய்வாழ்க்கையினையும், பற்றற்ற அறநெறி முறைகளையும் கைக்கொண்டு ஒழுகினாரிலர், அரசியலாரும் திருக்குறளுக்குப் போதிய மதிப்பளித்தாரிலர். கல்வித்துறையில் கம்பிக்க வேண்டிய பாடங்களுள் ஒன்றாகவே இதனைப் பயிற்றுகின்றனரே