பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 39
ஆங்கில மருத்துவம் கருவிகளாலும் விளம்பரங்களாலும், நாகரிகப் போலிப் பெருமையாலும் உயர்ந்தது போல் தோற்றங் காட்டுகின்றதேயன்றி, அது தமிழ் (சித்த) மருத்துவத்தைவிட எள்ளின் மூக்கத்துணையும் மேம்பட்டதன்று; மாறாக மிகவும் கீழ்ப்பட்டதே என்பதை ஆங்கில மருத்துவக் கோட்பாடுகளையும் அதன் கொள்பயன்களையும், தமிழ் மருத்துவக் கோட்பாடுகளையும் அதன் கொள்பயன்களையும் ஒன்றாக உணர்ந்து தெளிந்த அறிஞர் பலரும் உணர்வர். ஆங்கில மருத்துவத்திற் கையாளப்பெறும் கருவிகள் பெரும்பாலும் நோயை அறியத்தாம் பயன்படுகின்றனவே யன்றி, நோயைத்தீர்க்க ஒரு சிறு அளவிலேயே பயன்படுகின்றன என்பதை அவ்வாங்கில மருத்துவர்களே மறுக்க முடியாது. கொடிய நோய்களான புற்று நோய், தொழு நோய், மாரடைப்பு, மூலம், பித்தியம் (பைத்தியம்), கக்கற்கழிச்சல் (காலரா) பெரியம்மை, யானைக்கால் முதலிய நோய்களுக்கு ஆங்கில மருத்துவம் இன்னும் தீர்வான ஒரு மருந்தையும் கண்டு பிடிக்கவில்லை. தமிழ் மருத்துவத்தால் தீர்க்கப்பெறாத நோயே இல்லையென்று நம் மருத்துவ நூல்கள் அறுதியிட்டுரைக்கின்றன. இந்தியாவின் பொருளியல் சிக்கலுக்குக் கரணியமான மக்கட்பெருக்கத்தைத் தமிழ் மருத்துவத் தடை கொண்டு தடுத்து நிறுத்த முடியும். ஆனால் தேவையற்ற வகையில் ஏராளமான பொருளிழப்பு இவ்வழி ஏற்படுத்தப்படுகிறது. மேற்கண்ட நோய்களை முற்றும் குணப்படுத்தும் சிறந்த மருத்துவர்கள் இன்றும் தமிழகத்தில் உள்ளனர். போதிய வாய்ப்பின்மையால் அவர்கள் எங்கேனும் ஒரு சிற்றூரில் அமர்ந்தபடி வறுமையுளகப்பட்டுத் தம்மையும் தாம் கற்ற அரிய மருத்துவத்தையும் அழித்துக் கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், பாளையங்கோட்டையில் உள்ள இந்திய மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கும் போதிய ஏந்து (வசதி)கள் செய்து தரப் பெறவில்லை என்பதை யறிந்து மிகவும் வருந்துகின்றோம். அங்குள்ள ஆங்கில மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கும் இந்திய மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்குமிடையில் பூசல்களும் போட்டிகளும் போராட்டங்களும் நடைபெற்று வருவது மேலும் துயரத்தை விளைவிக்கின்றது. அண்மையில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழ் மருத்துவத்தைப் பகடி செய்யும் சுவரொட்டிகள் பலவற்றை அங்குப் போயிருந்த பொழுது கண்ணுற நேர்ந்தது. திருவள்ளுவர் கழுத்தில் துடிப்பறிமானி (Stethosecope )யைத் தொங்கவிட்டவாறு ஒரு படச் சுவரொட்டியுடன், நாடி பார்ப்பவர்களுக்கு இக்கருவி எதற்கென்று ஒரு கேள்வியும் இன்னும் பல போராட்டச் சொலவங்களும் (Slogan) எழுதப்பெற்றிருந்தன. இன்னொன்றில் கல்வம் ஒன்று வரையப்பெற்றுத் தமிழ்