பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 41
கோரிக்கைகளையும், ஆங்கில மருத்துவக் கல்லூரி மாணவர்களுடைய வேண்டுகோளையும் உடனே தனித்தனியாகக் கவனிக்க ஆவன செய்யக் கேட்டுக்கொள்கின்றோம். மேலும் 1964 இல் தொடங்கிய தமிழ் மருத்துவக்கல்லூரிப் பயிற்சியாளர்களில் 26பேர், வரும் 1969 நவம்பர் திங்களிலும், 25 பேர் 2970, சூன் திங்களிலும் வெளியே வரவிருக்கின்றனர் என்று அறிவிக்கப்பெறுகின்றது. அவர்களுக்கு வேலைவாய்ப்பிற்கென எவ்வகை உறுதியும் இதுவரை செய்யப்படவில்லை. இக்கல்லூரியினின்று வெளிவரும் தமிழ் மருத்துவப் பட்டம் (B.I.M.) பெற்றவர்கள், ஆங்கில மருத்துவப் பட்டம் M.B.B.S. பெற்றவர்களைப் போலவே மதிக்கப்பெறுவர் என்று சட்டப்படி அறிவிக்கப் பெற்றிருப்பது போலவே, நடைமுறையிலும் அவர்களை எந்த வேறுபாடுமின்றி கருதுமாறு தமிழக அரசினரைக் கேட்டுக்கொள்கின்றோம். இந்தச் சூழ்நிலையில் பொதுவாக நாம் கூறிக்கொள்ள விரும்புவது இதுதான். தமிழன் தன் மொழியைப் பேணாது விடுவானாயின், அவன் நாட்டை, அவன் பண்பாட்டை, அவன் கலைகளை, அவன் பெருமையை, ஏன் அவனையே இழந்தவனாகிவிடுவான். எனவே தன்னை இழப்பதற்குள்ளாகிலும் தமிழன் விழிப்புற்றெழ வேண்டும். அவனுக்குக் கொள்கை நோக்கும் வழிகாட்டியும் போராட்டக்கருவியும் தமிழ்தான்! அதனைக் கைவிட்டுவிட்டு அவன் ஓர் இம்மியும் முன்னேற முடியாது என்பதற்குத் தமிழ் மருத்துவமே சான்று. தழைக தமிழ் மருத்துவம்! ❖
தென்மொழி சுவடி - 7 ஓலை - 5,6 சூன், சூலை, ஆக-1969