பதிப்புரை
பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் எழுதிய பாடல்களுள் இன எழுச்சிப் பாடல்களே மிகுதியானவை. இருநூறு பாடல்களுக்கும் மேலாகத் தமிழின எழுச்சி குறித்து ஐயா எழுதியுள்ளார்.
“இருக்கும் நலன்களில் இனநலம் பெரிதென
எந்தமிழ் நல்லினம் நினைத்திடல் வேண்டும்"
- என்பது பாவலரேறுவின் பாடல் வரிகள்.
'இனநலம் ஏமாப்பு உடைத்து' - எனும் திருவள்ளுவ அறநெறி தமிழினக் காப்பு வரி - என்று அழுந்தக் கூறுவார் ஐயா.
சிற்றினம் சேராமை - எனும் அதிகாரத்துள், தமிழினக் காப்புக்குரிய கருத்துகள் எந்த அளவு விரித்துக் கூறப்பெற்றுள்ளன என இக்கால இனஉணர்வுத் தேவையோடு பொருத்திப்பேசியும் எழுதியும் விளக்குவார் பாவலரேறு.
தென்மொழி - தொடங்கப்பட்ட 1959 - ஆண்டு தொடங்கித் தமிழின எழுச்சிக்காக ஐயாவால் எழுதப்பெற்ற கட்டுரைகள் யாவும் தொகுக்கப்பெற்றுத் 'தமிழின எழுச்சி' எனும் பெயரில் முதல் பகுதியாக வெளியிடப்பெறுகிறது.
தமிழ்நிலம், தமிழ்ச்சிட்டு இதழ்களிலும், பிற இதழ்கள் வெளியீடுகளிலும் எழுதப்பெற்ற கட்டுரைகளும் விரைந்து அடுத்தப் பகுதியாக வெளிவரும்.
பாவலரேறுவின் 'பா'த்திறம் பெரும் சிறப்புடையது போலவே அவரின் உரைநடையும் பெருமளவில் எழுச்சியும், ஆற்றொழுக்க நடையையும் கொண்டது.