பக்கம்:தமிழின எழுச்சி.pdf/63

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

62 • தமிழின எழுச்சி

எதிர்பார்த்துக் கிடக்கின்றனர். அவர்கள் நம்மை இணைத்து அணைத்துப் பேசுகின்ற வெறும் பேச்சில் நாம் மயங்கி, சொக்கிக் கிடக்கும் வண்டுகளாகச் சோர்ந்திருப்பதைப் பயன்படுத்தி, அவர்களின் தந்நலச் செயல்களுக்கு உரமேற்றிக் கொள்கின்ற தன்மையை, இனவுணர்வும் பொது நலமும் அற்ற நம் போல் உள்ளவர்களால் உணர்ந்து கொள்ள முடியாது.

நம்மோடு நாமாகக் கிடக்கும் நம்மில் ஒருவன் காலவுணர்ச்சியால் சீண்டப் பெற்று, இனவுணர்வு உள்ளூரப் பெற்று, அறிவூட்டமும் வினைத்திட்பமும் செறியப்பெற்று, எழுந்து நின்று, வெண்மை உள்ளமும் உண்மை உரைகளும் திண்மை வினைகளும் கொண்டு, நம்மை நோக்கி, இவ்வுலகத்தைக் காட்டித் தன்னோடு நடந்து வரக் கூவுவானானால், நாம் அனைவரும் அவன் மேலாதிக்கத்தைப் பார்த்து ஐயுற்று, அவன்மேல் விழுந்து பிடுங்குவதுபோல், அவன் கொண்ட நெஞ்சின் அகலம் என்ன? அதனுள் புதைந்து கிடக்கும் அன்பின் ஆழம் எவ்வளவு? அவன் தன்னோடு நடையிடக்கூறுகின்ற சொற்களில் எத்தனைச் சொற்கள் அவன் உள்ளத்திலிருந்து வெளிவந்தன. எத்தனைச் சொற்கள் அவன் உதட்டிலிருந்து குதித்தன, அவற்றின் நீள அகலம் எவ்வளவு, அச் சொற்களில் உள்ள அறிவுச் சூட்டின் வெப்பத்திறம் எவ்வளவு, அச்சூடு, எந்தக்காலம் வரை ஆறாமல் இருக்கும், அவன் மண்டைக்குள் கிடக்கும் மூளைத் திரட்சிக்கு எப்படி இத்தகைய கொழுமை பிறந்தது? அக் கொழுமை நமக்கிருக்கும் மூளைக்கொழுமையைவிட எப்படி உயர்ந்ததாகிவிடும் - என்றெல்லாம் அவனைப்பற்றிய அகப்புற ஆராய்ச்சியில் ஈடுபட்டு, உரைப் பிளிறும் அவனை ஊமைப்படுத்தியும், நடை பயிற்றும் அவன் கால்களை முடப்படுத்தியும், நெறிப்படுத்தும் அவன் அன்புக்கைகளை முறித்தெறிந்தும் விடுவதுடன், அவன் முண்டி முன் செல்லும் பாதைகளிலெல்லாம் இடையூறாய்ப் போய்ச் சொற்புதர்களைப் பரப்பியும் பூசற்புரைகளை உண்டாக்கியும், பழிக்குழிகளையும், இழிவுப்பள்ளங்களையும் வெட்டி விழவைத்தும், என்றென்றும் நம்மை இருந்த இடத்திலேயே இருத்தி வைத்துக்கொண்டிருக்கும் நம் அறியாமையை என்னென்பது?

“செடி சாய்ந்தால் நடலாம்; மரஞ் சாய்ந்தால் நட முடியாது” என்னும் பழமொழிக்கோர் எடுத்துக்காட்டாய் இருக்கும் நம் இனத்தின் உட்புற அரிப்புகளையும் வெளிப்புற வெடிப்புகளையும் எண்ணி மாளாது, எத்தனை எத்தனைக் குலங்களாக, கொடிகளாக நாம் பிரிந்து வேரோடிக் கிடக்கின்றோம் என்று எண்ணி நம்முள் நடுங்குபவர்கள் எத்தனைப் பேர் இருப்பர்? அவருள் எத்தனைப் பேர் அக் குலச் சகதியினின்றும் கொடிச் சிக்கலினின்றும் விடுபட்டும் அறுபட்டும் வெளியே வந்திருப்பர். அத்துறையில் நமக்கு வழிகாட்டிச் செல்லும் தலைவர்