பக்கம்:தமிழின எழுச்சி.pdf/66

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 65

பேச அஞ்சுகின்றோம். அதிகாரத்திலோ, பதவியிலோ. அல்லது நமக்குத் தலைமையாகவோ இருக்கும் அவன், நம்மை நாம் நின்ற இடத்தி லிருந்து விரட்டி விட்டால் என்ன செய்வது? எங்கே போவது? என்றெல்லாம் எண்ணிப் பார்த்து அப்படிப் பேசத் தயங்குகின்றேம். உள்ளத்தில் அவனைப் பற்றிய வேற்றுமைகளைச் சுமந்து கொண்டு பொய்யாக அவன்முன் நின்று பேசிக்கொண்டிருக்கின்றோமே என்று நாம் வெட்கப்பட்டுக் கொள்வதில்லை. அதனால் உண்மையைப் பேச அஞ்சவேண்டி யிருக்கின்றது. நாம் நமக்காக மட்டும் வாழ்ந்து கொண்டி ருக்கின்றோம் என்ற சிறுமையான எண்ணத்திலிருந்து விடுபட்டால் தான், நாம் எல்லாரையும் நேருக்கு நேராக நின்று கேள்வி கேட்கத் தோன்றும்; நேருக்கு நேராக நின்று கண்டிக்க - தேவையானால் அவர் வருந்தும்படி இடித்துக் கூற நம் நாத்துடிதுடிக்கும்.

நேருக்கு நேராக நின்று இடித்துக் கூறுகின்ற வரையில் நாம் சரியான ஒரு தலைமையைப் பெற முடியாது. குற்றங்களை நம் தனிப்பட்ட ஒருவர்க்காகக் கூட நாம் மூடி மறைத்துவிடக் கூடாது. 'நம்மவர் தானே' என்பதற்காக நாம் நம்மவரைக் கேட்கத் தவறி விட்டால் நம் பகைமையைவிட வேண்டாம் கேடான பகைவனுக்குப் பின்னே நாம் நடந்து கொண்டிருக்கிறோம் என்று எண்ணிக் கொள்ள வேண்டியது தான். 'நம் குற்றங் குறைகளை மூடி மறைக்கப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்' என்று தன்னைப் பின்பற்றுகின்றவர்களைப் பற்றி எந்தத் தலைவன் சொன்னாலும் அவனை நாம் நம்பக் கூடாது. அவன் நமக்குத் தெரியாமல் எத்தனையோ குற்றங்களை, கொடுமைகளை மறைவாகச் செய்து கொண்டிருக்கின்றான் என்பது பொருள். அத்தகையவன் வேண்டுமானால் நாட்டைப் பிடிக்கலாம்; ஆட்சியைப் பிடிக்கலாம்; ஆனால் நம் பகைவனைப் பிடித்துவிட முடியாது. இவ்வரிகள் வெறும் எழுத்துகளல்ல. என்றுமே பொய் போகாத மெய்யுணர்வின் ஓலங்கள்.

தமிழர்களாகிய நமக்கு வந்து வாய்த்த பகை, புறத்தே இருந்து வந்த பகைதான் என்பதை நமக்குக் கிடைத்த பழம் பெரும் நூல்கள் ஓயாது பறை சாற்றி நிற்கின்றன. ஆனால் காலத்தால் அப் புறப்பகை நம் அகப்பகையாக உருக்கரந்து ஊடுருவி நிற்கின்றது. இவ்வகையில், நாம் நல்லன என்று கைப்பற்றிய தீமைகளும் உண்டு; தீமைகள் என்று கை நெகிழ்த்த நன்மைகளும் உண்டு. இவற்றைத் தனித்தனியே இனங்கண்டு கொள்ளாதவரையில் நாம் மேற்கொள்ளவிருக்கும் போராட்டம் எவருடன் என்பதும், நாம் முன்னேறிச் செல்ல வேண்டிய திசை எது வென்பதும் நமக்கு விளங்காமல் போய்விடும், இவற்றை ஒருவாறு விளங்கிக் கொண்ட பின், சிலவற்றுக்காக நம்மோடு நாமே போராடிக் கொள்ள வேண்டிருக்கும்; சிலவற்றுக்காக நம் பகைவருடன் நாம்