66 • தமிழின எழுச்சி
கைகோத்துக் கொள்ள வேண்டியிருக்கும்; நாம் விரும்பிப் பேராசையுடன் போற்றிவந்த சில பழக்கவழக்கங்களுக்கு நம் கைகளாலேயே தீயிட்டுப் பொசுக்க வேண்டியிருக்கும். நாம் இடையில் ஆகாதவை என்று தூக்கி வீசிவிட்டு வந்த சிலவற்றை நாம் மீண்டும் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும். இம்முடிவுகள் தெரியும்வரை நாம் வெற்றி முகட்டைத் தொட்டு விட்டோம் என்று பீற்றிக்கொள்ள முடியாது. அவ்வாறு பீற்றிக் கொள்வதிலும் பெருமையில்லை.
நாம் வெற்றி கொள்ளவிருக்கும் பகைப்புலன்களின் அடிச்சுவட்டையும் இதுவரை நாம் கண்டு கொண்டதாகச் சொல்லிக் கொள்ள முடியாது. உண்மை என்ற வாளைக் கைப்பற்ற நாம் பழகிக்கொள்ளவே இன்னும் ஒரு நூற்றாண்டானாலும் ஆகும்! ஓராயிரமாண்டானாலும் ஆகும். அதன்மேல் 'அறிவு' என்ற கேடயத்தை வேறு ஏந்திப் பழகுதல் வேண்டும். அதன்பின் 'ஒழுக்க'க் கவசத்தை நம் உடல் முழுதும் அணிந்து கொள்ளுதல் வேண்டும். அதற்குப் பின்தான் நம் உடல் தசைக்குள், அதன் நாடி நரம்புகளுக்குள் ஒளிந்து கொண்டிருக்கின்ற 'வீர உணர்வு முகிழ்த்து, நம் தசைக் கண்ணறைகள் யாவிலும் பொங்கிவழியும். இவையெல்லாவற்றிற்கும் பின்னர் நடப்பதுதான் வியப்பிலும் வியப்பை நமக்குத்தரும்! உண்மையும், அறிவும், ஒழுக்கமும் வீரமும் நம்மை ஆட்கொள்ளும் அந்நேரத்தில், பகை நம்மை முந்திக்கொண்டு விடுமோ என்று நினைத்துவிட வேண்டா, அந்தப்பகை தானாகவே நம்முன் தன்னை அழித்துக் கொண்டு நெடுங்கிடையாக வீழ்ந்து இறந்துபடும். நம்மை இத்தனை யாண்டுக் காலமாகக் கட்டழித்துக்கொண்டு வந்த துயரங்கள் அக்கால் நமக்குப் போற்றித்திரு அகவலாக மாற்றப் பெறும். நம்மைத் தாழ்த்தி எழுதி வைக்கப் பெற்ற புராண இதிகாசப் பங்குகள் யாவும் புழுப்பூச்சிகளுக்கு இரையாக்கப் பெறும். குலவிழிவுகளும், இனக்கட்டுகளும் அறவே அகற்றப்பட்டு மீமிசை மாந்தத் தமிழ்க் குமுகாயம் ஒருங்கே மலரும். அதில் நம்மின் புதிய வரலாறும் பழைய வரலாறும் பொன்னும் மணியும் போல் பொதிந்து போற்றப்பெறும். அந் நற்காலத்தை நோக்கிப் போகவிரும்பும் நாம் ஒவ்வொருவரும் நம் உடலில் ஓடுவது தமிழ்அரத்தந் தானா ? தமிழனின் உருவத்தினின்று இன்னும் நாம் மாறாமல்தானே இருக்கின்றோம்? நம்மிடத்தில் பொது நலவுணர்வு ஓர் எள்ளின் மூக்கத் துணையேனும் உளதா? என்றெல்லாம் நம்மை நாமே எடையிட்டு நிறுத்துப் பார்த்துக்கொண்டு நடையிட்டுச் செல்லுதல் வேண்டும். ❖
தென்மொழி, சுவடி-9 ஓலை-6, 7, நவம்பர் 1971