பக்கம்:தமிழின எழுச்சி.pdf/81

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

80 • தமிழின எழுச்சி


பிறந்தாளை ஒருவன் மணப்பதற்கும் பாலியல் பொருத்தம் இருப்பதையும், உலகியல் இயக்கப் பொருத்தம் இல்லாமையையும் எண்ணி, இக்கருத்தைத் தெளிந்துகொள்க. எனவே கருத்து வேறுபாடே அறிவு ஆகாது. அறிவுப் புணர்ச்சி இன்றியே கருத்துப் பிறப்புத் தோன்றும். ஆகவே, பிறக்கின்ற கருத்தெல்லாம் அறிவாகாது. இனி, அறிவெழுச்சியிலும் தெளிவும் உண்டு; தெளிவின்மையும் உண்டு. உலகில் ஊற்றெடுக்கும் ஆற்று நீரினும் சுனை நீரினும் கிணற்று நீரினும், உவர்ப்புப் சுவையும், இனிப்புச் சுவையும் அவற்றின் இடைப்பட்ட சுவைகளும் உண்டு. நீர் எனும் பொதுவுண்மையால், குடிநீர் எனும் சிறப்பை அது பெற்றுவிடமுடியாது. சுடர் நிலைகள் பலவுண்டு என்னும் உண்மையால் கைவிளக்கு கதிரவனின் ஒண்சுடராகிவிட முடியாது. அவைபோல், ஒருவர் உளத்துத் தோன்றும் தன்மையாலேயே அது கருத்தாகிவிடாது. இனி, அதில் அறிவூற்றம் இருப்பதாகவும் கொண்டு விட முடியாது. உலகின் அனைத்து வெளிப்பாட்டு நிலைகளிலும் பொருண்மையும் உண்டு; போன்மையும் உண்டு. அவற்றைத் தெளிந்து தேறுவதில் தான் வாழ்க்கைச்சிறப்பே உள்ளது.

எனவே, ஒருவர்க்கு ஒரு கொள்கையில், அது தழுவி இயங்கும் ஓர் இயக்கத்தில் - கருத்து வேறுபாடு தோன்றின மட்டிலேயே, அவர் அறிவுத் தெளிவு பெற்றவராகவோ, அவ்வியக்கம் அறிவு முடக்கம் கொண்டதாகவோ ஆகிவிடமுடியாது. கருத்து வேறுபடுபவனெல்லாம் அறிவுள்ளவனாகக் கருதப்படும் போலி நிலைகள் உலகத்தே இருப்பதால்தான், அறிவுப் பிறழ்ச்சியெல்லாம் அறிவு எழுச்சியாகக் கருத வேண்டிய மயக்க நிலைகளும் உள்ளன. உலகத்தில் உயிர்களாகக் கிளர்ந்தெழுந்தவை யாவற்றிற்கும் அறிவு உண்டு. ஆனால் தன்னறிவு தன்னியக்கத்துக்கே பயன்படும் கீழ்நிலைக்கும், தன்னறிவு பிறவியக்கத்துக்கும் பயன்படும் மேல்நிலைக்கும் இடையே பல்வகையான வேறுபாட்டு நிலைகள், ஒவ்வோர் உயிரினத்தின் படிநிலைகளிலும் உண்டு. ஓர் எறும்புக் கூட்டத்தினை இயக்கவும், வளர்ச்சியுறச் செய்யவும், அக்கூட்டத்துள் பிறவியக்கம் கொண்ட பொதுவுணர் வெறும்புகள் இருப்பனபோல், மாந்தவினத்துள்ளும் தன்னியக்க அறிவுள்ளவர்களை இயக்க, பொதுவியக்க வுணர்வுள்ளவர்கள் பலர் உளர். ஆனால் அவர்களை இனங்கண்டு கொண்டு, அவர்களுடன் தன்னியக்க வுணர்வுள்ளவர்கள் தம்மை இணைத்துக் கொள்வதில்தான், உயிரியக்கத்தின் வெற்றியே அமைந்து உள்ளது. இவ்வியற்கைக் கோட்பாடுகளை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளவேண்டியே, நமக்கு அறிவு விளக்கம் தரப் பெற்றுள்ளது. ஆகவே, ஒருவர்க்குக் கிளர்ந்தெழும் கருத்து வேறுபாடே பிறிதோர் இயக்கத்தைத் தோற்றுவித்தற்குரிய முழுநிலை வித்தும் உரமும் கொண்டதாக ஆகிவிடாது. ஒரு மரத்தினின்று காற்றாலோ, ஒரு