88 - தமிழின எழுச்சி
களை அவ்வச் சிதைவுகளுக்குட்பட்டார் தம் நடுநிலைக் கண்கொண்டு தேறுகின்ற நிலை என்றும் பொருந்தி விடுவதில்லை. எனவே இயக்கச் சிதைவுக்கான அறுவகைக் கரணியங்களுள் இவ்விரண்டாவது கரணியமாகிய பொருள் நசையே பெருவகையான இயக்கச் சிதைவுகளுக்கும், அடிநிலையாக இருந்து, எளிதில் கண்டுணரமுடியாத முடிநிலையாகவும் இருக்கின்றது. ஏனெனில் பொருள் நாட்டமில்லா ஒரு சிறு இயக்கத்தினையும் உலகில் காண வியலாது. தனி நலவுணர்வுள்ளவனுக்குள்ள பொருள் நாட்டம் போலவே பொது நல வுணர்வுள்ளவனுக்குள்ள பொருள் நாட்டம் இருக்கும். ஆனால் முன்னவன் நடுவூரில் பழுக்கும் நச்சுமரம் போன்றவன்; பின்னவன் ஊர்ப்புறத்தே தோண்டிய ஊருணியைப் போன்றவன் என்பதைக் காலத்தேதான் அறியமுடியும். அதுவுமன்றி முன்னவனுக்குப் பொருள் வழிபாடு கருவியாக விளங்குகின்றது; பின்னவனுக்கு அது வினைபடு கருவியாக அமைகின்றது. இந்த நுண்ணிய வேறுபாடுகளை மக்கள் கண்டு தெளிவது ஓரளவு அறிவின்பாற் பட்டதாகலின், அது மிக அரிதாகவும் ஆகிறது.
எனவே, ஓரியக்கத்துள் எதிர்பாரா வகையில் உருவாகும் பொருள் நிலை வேறுபாடுகளைக் கண்டுகொள்ளும் பொழுது, உண்மையிலேயே அப்படிக் கண்டவர்கள் பொதுநிலை உணர்வுள்ளவர்களாயின், ஏற்கனவே உள்ள அந்த இயக்கப்பொருள் பொதுப் பொருளாகையால், அதனை மேலும் கட்டிக்காக்கவே விரும்பி, அவ்வியக்கத்திலேயே தம்மை மேலும் நிலைப்படுத்திக் கொள்ள முயல்வார்களேயன்றி, அதன் பொருட்டுத் தாம் இன்னோர் இயக்கத்தை உருவாக்க விரும்ப மாட்டார்கள். அவ்வாறின்றித் தாமும் வேறோர் இயக்கத்தை உருவாக்க விரும்புவார்களாயின், அவர்களைப் பொருள்நசை உள்ளவர்களாகவே நாம் கருதிக்கொள்ளல் வேண்டும். ஓரியக்கத்தை உருவாக்குகின்ற தகுதிநிலைகளுள், தாம் பொருள்நசையின்றி இருப்பதனோடு மட்டும் அமையாது, பிறர் அவ்வாறு பொருள் நசை கொண்டு இயங்குவதைத் தடுப்பதும் ஒரு மேம்பட்ட தகுதியாகும் என்று எண்ணிக்கொள்க. பிறரின் பொருளாசையைக் கண்டிக்க இயலாதவன், தன் உள்ளத்துள் எழும் பொருளாசையைக் கண்டிக்கத் தகுதியற்றவனாகப் போகின்றான். அப்படிப்பட்டவன் இன்னோர் இயக்கத்தை எவ்வகையானும் வெற்றியுடன் இயக்குதல் இயலாது என்க.
இனி, இயக்கங்களின் உள் உடைவுகளுக்கு அடுத்த பெருங்கரணியமாக நிற்பது, புகழ்க் காழ்ப்பு எனும் மனக் கிளர்ச்சியே. இவ்வணர்வு எவ்வளவு சிறியவரானாலும் எத்துணைப் பெரியவரானாலும் அவ்வவ்வளவில் உள் நின்று ஆட்டிவைக்கும் தன்மை வாய்ந்தது. தம்மோடு நெருங்கிய வீடுகளில் வாழ்ந்தோ , ஒரே தெருவில் குடியிருந்தோ, ஒரே