பக்கம்:தமிழிலக்கண அகரவரிசை.pdf/3

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழிலக்கண அகரவரிசை

தமிழ்மொழி இலக்கண இலக்கிய வளம்பெற்ற ஓர் உயர் தனிச் செம்மொழி என்பதும் பழமைக்குப் பழமையும் புதுமைக்குப் புதுமையும் உடையதாய்த் திகழும் ஒரு வண்மொழி என்பதும் மொழித்துறை அறிஞர்கள் பலருக்கும் ஒப்பமுடிந்த முடிபுகள். மிக நீண்ட வரலாற்றைக் கொண்ட இம் மொழியில் காலங்கள்தோறும் பல இலக்கணங்கள் தோன்றின : அந்த இலக்கணங்களுக்குப் பல்வேறு விளக்கங்களும் எழுந்தன. மொழித்துறைக்கு வளம் சேர்த்த இலக்கண நூல்களைப்பற்றிய குறிப்புகளின் தொகுப்பு இனி நிகழவேண்டிய மொழியாராய்ச்சிக்கு மிகவும் துணைபுரியும் என்பதால் இந்தத் தொகுப்புப் பணியில் என் மனம்ஈடுபட்டது.

இந்தத் தொகுப்பில் இலக்கண நூல்களை முதலில் அகரவரிசைப் படுத்திக் கொடுத்திருப்பதால் இதற்குத் தமிழிலக்கண அகரவரிசை என்றே பெயரிடப்பட்டது. தமிழிலக்கண அகரவரிசை மூன்று பிரிவுகளாக அமைந்துள்ளது. முதற்பகுதியில் பிறவிவரங்களோடு நூலின் பெயர்கள் அகரவரிசையில் கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டாம் பகுதியில் சில விவரங்கள் குறைவாக உள்ள நூலின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மூன்றாம் பகுதியில் நூலாசிரியரின் பெயர்கள் நூற்பெயர்களோடு அகரவரிசையில் தரப்பட்டுள்ளன.

நூற்பெயர் அகரவரிசையில் நூலின் பெயர், ஆசிரியர் பெயர், உரையாசிரியர் பெயர், பதிப்பாசிரியர் பெயர், பதிப்பித்த ஆண்டு, பதிப்பித்த இடம், நூலின் பக்கம் முதலிய விவரங்கள் நூலுக்கும் தேவைக்கும் ஏற்ற வகையில் தரப்பட்டுள்ளன. சில நூல்களில் பிரபவ, விபவ, முதலிய ஆண்டுகள் மட்டுமே காணப்படுகின்றன. அவற்றுக்குச் சரியான கிறித்துவ ஆண்டு எது என்று உறுதிப்படுத்த இயலாத இடங்களில் ஆங்காங்கே வினாக்குறி இட்டுள்ளோம்.

ஆசிரியர் பெயர், உரையாசிரியர் பெயர் முதலாய சில விவரங்கள் சில நூல்களில் காணப்படவில்லை. அவற்றை இரண்டாம் பகுதியில் நூற்பெயர் அகரவரிசை இணைப்பு என்ற தலைப்பில் கொடுத்துள்ளோம். இந்த இரண்டு அகரவரிசையிலும் வரும் ஆசிரியர் பெயர்களை ஆசிரியர் அகரவரிசையில் காணலாம். இதில் நூலாசிரியர்களின் பெயர்களை மட்டுமன்றி உரையாசிரியர் பெயர்களையும் பதிப்பாசிரியர் பெயர்களையுங் கூடக் காணலாம்.