பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நனவு மனப் படிமங்களினுள்ளே நனவிலி மன ஆசைகள் மறைந்திருக்கும். இவ்வாறு நனவிலி மன ஆசைகளை உள் வைத்திருக்கும் நனவு மனப் படிமங்களையே குறியீடுகள் எனலாம். அடுத்து குறிப்பிட்டதொரு செயல் அல்லது குறிப்பிட்டதொரு பழக்கம் கூட குறியீடாகலாம். எந்த ஒரு புற உலகப் பொருளும் நனவிலி மன வேட்கையின் குறியீடாகலாம். அமுக்கப்பட்ட வேட்கைகளைப் படிமங்களின் உள் புதைக்கும் மனதின் நனவு நிலை / நனவிலி நிலைச் செயற்பாட்டையே குறியீட்டாக்கம் என உளப்பகுப்பாய்வு அடிப்படையில் சொல்லலாம்' (இலக்கியமும் உளப்பகுப்பாய்வும், ப. 106), 'உளப்பகுப்பாய்வின் தந்தையாகிய சிக்மண்ட் ஃபிராய்ட், குறியீடுகள் காமப் பொருண்மை உடையன என்கிறார். இயல்பாக எழத்துடிக்கும் காம விழைவுகள் தடையாகும் பொழுது குறியீடுகளாக வெளிப்படும் என்பதைக் கண்டறிந்தார் ஃபிராய்ட்' (ஆய்வுக்கோவை 2002, தொகுதி-2, ப.1014).

ஒரு கவிஞன், குறிப்பிட்ட ஓர் உவமையையோ, உருவகத்தையோ இன்ன பிறவற்றையோ மீண்டும் மீண்டும் தம் படைப்பில் பலமுறை கையாளுவதன் காரணமாக ஒரு பொதுப்பொருள் தோன்றி அதன் வாயிலாக, அக்கவிஞரின் அடிமனத்து உணர்வு ஒன்று 'காட்சி நிலை' எய்துமானால் அதனைக் குறியீடு எனலாம்' (பாரதியும் வள்ளத்தோளும் ஒப்பியல் பார்வை, ப. 258). ‘சில காட்சிப் படிமங்களைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி உணர்த்த முடியாத பொருட்களை அவற்றோடு இணைத்து, நுண்பொருட்களுக்குப் பருப்பொருள் வடிவம் கொடுத்துக் கவிதைகளில் வெளிப்படுத்திக் காட்டக் கவிஞன் கையாளும் ஒருவித இலக்கிய உத்தியே குறியீட்டு அமைப்பு ஆகும்' (மேற்படி, ப.262), ‘கவிதையில் ஒரு பொருளைக் குறிப்பிட்டு அதன் வாயிலாக அதனுடன் தொடர்புள்ள வேறொரு பொருளைக் குறியிட்டுக் காட்டுவதே குறியீடு' (சங்கப்பாட்டில் குறியீடு, ப.11).)

கருத்துப் பரிமாற்றம் செய்யும் அல்லது உரையாடும் நபர்களிடையே பொதுவான பொருளை உடையது குறியீடு. சமூகத்தில் கருத்துப் பரிமாற்றத்திற்கு மொழி ஒரு முக்கியமான குறியீட்டு முறையாகும் என சமூகவியல் மற்றும் மானிடவியல் கலைச்சொல் விளக்க அகராதி கூறுகிறது (ப.234). ‘குறியீடு என்பது ஒரு பொருளுக்காக நிற்பது; அப்பொருள் வழியே மெய்ம்மை அல்லது கருத்தைப் புலப்படுத்துகிறது என்ற கருத்தை நோக்கலாம்' (கவிக்கோக்கவி, ப.44). ‘உவமானம் ஒரு உவமேயத்திற்குத் திரும்பத் திரும்ப ஒப்பீடாக வருகிற போதும், ஒப்பீடு செய்கிறபோது உவமானத்தை மட்டும் குறிப்பிட்டு விட்டு உவமேயத்தைக் குறிப்பிடாமலேயே உணர்த்துவதும் குறியீடுகளாகும்' (தமிழ்ப் புதுக்கவிதைகளில் படிமங்கள், ப.42). 'ஒப்புறவாலும் ஒட்டுறவாலும் மற்றொன்றைக் குறிப்பாக உணர்த்தும் பொருள் (object) குறியீடு எனப்படுகிறது' (புதுக்கவிதையில் குறியீடு, ப.5). )

பயன்

குறியீடுகள் நுண்பொருள் வடிவ உத்தியாகப் பயன்படுகின்றன. 'கவிஞன் பயன்படுத்தும் சொற்களின் பொருள்களுக்குட் பட்ட எல்லையிலிருந்து, அதே சமயத்தில் கவிஞன் உணர்த்த விரும்பும் பொருளின் எல்லைக்குள் படிப்போரை அழைத்துச் செல்லும் உத்திகள் இவ்வகை உத்திகளாகும்.' கூறவந்த பொருளைக் கவிஞன் நயம்பட அழுத்தமாக உணர்த்துவதற்கு நுண்பொருள் உத்திகள் பயன்படுவதாக அமையும். கவிதைக்குரிய

இறுக்கத்தையும் செறிவையும் உருவாக்கும் சொற்சிக்கனம், கவிதைகளில் குறியீடுகளாக வெளிப்பட்டுக் கவிதைப் பொருளைச் சிறப்பிக்க வைக்கின்றன' (கவிக்கோக்கவி, ப.42). நுண்பொருள் உத்தியான இக்குறியீட்டு உத்தி கவிதைக்கு வடிவம் தருபவை. கவிதை உள்ளடக்கத்தின் பொருள் பரிணாமத்தை அதிகரிக்க உதவுபவை.

xiii