பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உள்ளுறை பாத்திரக் குறியீட்டுக்கு இடம் தரல்,மேற்கண்ட பகுப்புகளிலிருந்து வேறுபடுகின்றது.உணர்வு,ஒழுக்கம் என்பனவற்றில் ஒப்புடைமை காட்டப்படினும், அகப்பாடலின் நோக்கமாக,கூற்றில் உத்தியாக வருவதால் தனித்தன்மை கொள்கின்றது.விலங்கு,வேறு வல் உயிரின வகைகள் தலைவனுக்கும்,பயிரினம்,மென் பறவையினங்கள்,சிறு உயரினங்கள் தலைவி-பிற பெண்டிற்கும் குறியீடாவது முழுப் பார்வையில் உறுதி செய்யப்படலாம்."வயலைச் செங்கொடி களவன் அறுக்கும்"(ஐங்.252) என்பது மருதச் சூழலில் பாத்திரங்களையும் ஒழுக்கத்தையும் உணர்த்தும். "சேற்று நிலை முனைஇய செங்கட் காரான்" (அகம்.461), "பகுவாய் வரா அல் பல்வரி இரும்போத்து" (அகம்.361) என்ற தொடக்கமும் அவற்றால் சிதைக்கப்படும்-உண்ணப்படும் நீர்த் தாவரங்கள் அதே மருதச் சூழல் குறிப்பிட்ட பாத்திரங்களையும் செயற்பாட்டையும் உணர்த்தித் தொடர்வதும் இங்குச் சுட்டுதற்குரியான.முதலை (ஐங்.5;41)யாமை (அகம்.256), மாவடி (கலி.84),மஞ்ஞை (நற்.288),நெருஞ்சி (குறு.315),நாவல் கனி (நற்.35)போன்று பல தலைவிக்கும் குறியீடாகி வருவது புலப்படுகின்றது.தோழி,பாணன்,பரத்தை எனப் பிற மாந்தர்க்கும் இவ்வாறு பார்த்தல் இயலும்.

சில சிந்தனைகள்

இவை தவிர ஒப்புமை அடிப்படையில் குறியீட்டை உணர வேறுகளங்களும் இடம் தரலாம்.கதை மாந்தர்-பாத்திரம் என்பது அவற்றுளொன்று. கண்ணகி கற்புக்குறியீடாதல்,பாரி வள்ளன்மைக் குறியீடாதல்,சகுனி-கூனி எதிர்மைக் குறியீடாதல் போன்றன சான்று. நிகழ்ச்சி,கதை என விரிகளன்கள் இவற்றிற்கு இடம் தரும். விலங்குக் கதைகள்,எடுத்துக்காட்டுக் கதைகள் என மனித ஆக்கத்தோடு தரப்படும் பிற கதைவகைகளும் இங்குக் கொள்ளப்படலாம்.கனவுக் குறியீடுகள் தனிவகையமைப்பதும் கருதத்தக்கது.

எல்லாவகை இலக்கிய களனுக்கும் ஒரேவகையான அணுகுமுறை குறியீட்டைக் காண்பதில் அமையக்கூடும் என்பதில்லை. சமய இலக்கியம்,சித்தர் பாடல் போன்றன வெவ்வேறுவிதமான அணுகுதலை வேண்ட வாய்ப்புள்ளது."தோன்றுவது கிளந்த துணிவு"எனத் தொடர்போ ஒப்புமையோ இல்லாத பாங்கு தனித்த தேடுதல் சிந்தனைக்குரியது.

குறியீடுகளை இனம்காணும் வழிமுறைகளும் அதற்குத் தளம் வழங்கும் களங்களும் மேலாய்வில் இன்னும் விரியலாம்.பொதுமைப்படத்தக்க அளவு கோல்களுடன் ஊகம்,உள்ளுணர்வு (intution) எனத் தனிப்பட்டு படைப்போன் / சுவைப்போன் / திறனாய்வோன் பார்வையில் வருவன உள்ளமை இதற்கு காரணமாகும்.

அனுபவம்,பின்புல அறிவு ஆகியவற்றின் போதாமை,குறியீடு அடையாளங் காணப்படாமற் போவதற்கு வாய்ப்பு தந்து விடக் கூடும். மற்றொரு மொழியையோ பண்பாட்டையோ "மாதிரி"யாக்கி மட்டுமே குறியீடுகளை இனங்கண்டு விடமுடியும் என்பதும் பொருந்தாதாம்.

முதற்பார்வையிலேயே தென்பட்டுவிடுதல் ஒருபால் அமையும் எனினும்,மறுபார்வை / மீண்டும் மீண்டும் பயில்தல் என்பதால் தெரிதல் என்பது, குறியீட்டை எளிமை-ஆழம் எனும் இரு எல்லைகளிலும் கொண்டு போவது கண்கூடு.

சுருக்கம்,செறிவு என்பனவற்றிற்கும் மேலாக தெளிவின்மை, இருண்மை என்ற பான்மைகளால் பொருள் கட்டி அகராதிப்படுத்த முடியாதபடி - வரையறைக்குள் அகப்படுத்த இயலாதவாறு அமையும் குறியீடுகள் படைப்பாளியின் விளக்கத்தை வேண்டி நிற்கும்.அல்லது கனவு காண்போனால் முழுமையாக விளங்கிக் கொள்ளப்படா நிலை


xxiii