பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமைவது போல, குறியீடும் புலப்பாடு பெறாது அமைந்துவிட முடியும்.இதனால்,குறியீடு முதன்மை பெறுகிறதேயன்றி அதன் பொருளோ விளக்கமோ அல்ல என்ற எண்ணம் எழுகிறது.

குறியீடு உருவாகுதல்,குறியீடாகப் பயன் கொள்ளப்படுதல், குறியீடாக வெளிப்படக் கூடுவதைத் தேருதல்-தேடுதல் எனப் பன்முகப் பார்வையும் வேண்டப்படுவதாகத் தோன்றுகிறது.

புலன்களால் உணரக் கூடிய பண்பும் வடிவும் பயனும் உள்ள உண்மையான அல்லது கற்பனையான எப்பொருளும் குறியீடு ஆகலாம்; பெரும்பாலும் அருவமானது, உணரமுடிந்தும் எளிதில் காட்ட முடியாத தன்மை போன்றன தேவை காரணமாகவும் நயம் கருதியும் குறியீடு வாயிலாகப் புலப்படுகின்றன;பல சொல்லால் விளக்கப்பட வேண்டியதை அவ்வாறன்றித் தர,நேரடியாகக் கூறுவதைத் தவிர்த்து மொழிய,மறைத்துத் தர, குறியீடு பதிலியாகிறது.