பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேரா. முனைவர் கரு. அழ. குணசேகரன் இயக்குநர் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சென்னை -600 113

அணிந்துரை

தமிழிலக்கியக் குறியீடுகள் அகராதி எனும் இந்த அகராதி வெறுமனே தமிழ் இலக்கியங்களில் காணலாகும் குறியீட்டுச் சொற்களை அறிவதற்கான நூல் மட்டுமல்ல; மாறாக, நம் பழந்தமிழ் இலக்கியவாதிகளின் மதிநுட்பம், உலகியல் அறிவு, மொழிப் புலமை, படைப்பாற்றல் போன்ற பற்பல திறன்களையும் வெளிப்படுத்துவது.

இலக்கியத் தளத்தில் மட்டுமன்றி, வாழ்வியலிலும் நாட்டுப்புறக் களனிலும் சமய நெறியிலும் வழிபாட்டு முறையிலும் நம்பிக்கை, பழக்கவழக்கங்களிலும் விழாக் களிலும் சடங்குகளிலும் அமையும் செயற்பாடுகளிலும் பொருட்களிலும் குறியீட்டுப் பொருண்மை தேர்வதும் மக்கட் பண்பாட்டின் மனப்பரிமாணத்தை வெளிப்படுத்தித் தர முடியும். எனும் நூலாசிரியர் கூற்று இங்கு எண்ணுதற்குரியதாகும்.

குறியீடு என்பது இடம், இனம், மொழி, சாதி, பால் எனும் காரணிகளுடன் இணைந்து வெளிப்படக்கூடியதாகும். மொழியியல் வல்லுநர்கள் நவீன இலக்கிய ஆய்வுத்தேடலின் போதும், விமர்சனத்தின் போதும் சந்தித்த பிரச்சினைகளின் விளைவாகக் கண்டறிந்த ஒரு விதக் கருத்துப் பரிமாற்ற உத்திமுறையாகும்.

தமிழ்ச் சூழலில் புதுக்கவிதை விமர்சனத்தின்போது பெரிதும் குறியீட்டு மொழி குறித்த சிந்தனையை அழுத்தமாகச் சிந்திக்க நேரிட்டது. மொழியியலார், அரங்கியலார் குறியீடுகள் குறித்துப் பெரிதும் சிந்தித்தனர்.

குறியீடு என்பது வேறு வேறு துறைகளில் சிறப்பு பொருண்மை கொண்டு அதன் தனித்துவத் தன்மைகளை விளக்குகிறது. அ முதல் வ வரையில் அமைக்கப்பட்டுள்ள இவ்அகராதியில் அகர வரிசையில் அமையாத துணைத் தலைப்புச் சொற்களின் பட்டியல் தனித்து அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ளன.

(எ) பள்ளி palli (bed) : ஆழ்ந்த சிந்தனை/உறக்கமின்மை deep thought, sleeplessness ‘எழினி வாங்கிய ஈர் அறைப்பள்ளியுள் .......... மண்டு அமர் நசையொடு கண்படை பெறாஅது' (முல். 64-67)

எனுமாறு ஆங்கிலத்தில் எடுத்து விளக்கிப் பின் பழந்தமிழ்ப் பாடல் அடிகளைச் சான்று காட்டி எடுத்துரைத்திருப்பதன் வழி நூலாசிரியரிடம் அமைந்திருக்கும் ஆய்வுச் சிந்தனை ஆற்றலை உணரமுடிகிறது.