பக்கம்:தமிழில் அறிவியல்-அன்றும் இன்றும்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் அறிவியல்-இன்று

143


கற்றுத் தெளிந்து அறிவு பெறல் வேண்டும். ஏறக்குறைப 1000 பேர் இப்பயிற்சியில் சேர்ந்தால் 5 பேர்களே எல்லாத் தேர்வுகளிலும் தேர்ச்சி பெறலாம். இவர்கள் விமானப் படையினர் போன்று பயிற்சி பெறுதல் வேண்டும். விண்வெளிக் கூண்டில் (Astrodome) அவர்கட்கு இப்பயிற்சி அளிக்கப்பெறும்.

அம்புலிப் பயணத் திட்டங்கள்: விண்வெளிச் செலவில் அம்புலிதான் முதன் முதலாக மக்கள் மனத்தைக் கவர்ந்தது. இதனை அறிவியல் பற்றிய காரணங்களுக்காகவே தேர்ந்தெடுத்தனர். விண்வெளியில் உலவிவரும் கோள்களுள் இதுவே பூமியின் அருகில் உள்ளது. ஏனைய உலகங்களுக்குச் செல்வதைவிட இதற்குச் செல்வது தான் எளிது. இது பூமியை ஒரு நீள் வட்டச் சுற்று வழியில் (Elliptical orbit) வலம் வருகின்றது. கிட்டத்தட்ட இப்பாதையை ஒரு வட்டப்பாதை என்றே சொல்லலாம். பூமியினின்றும் திங்களின் சேய்மைத் தூரம் (Apogee) 4,07, 000 கி. மீ; அதன் அண்மைத் தொலைவு (Perigee) 3,56, 00 கி. மீ. பூமிக்கும் திங்களுக்கும் உள்ள சராசரித் தொலைவு கிட்டத்தட்ட 3,84,000 கி. மீ, திங்கள் பூமிக்கு அண்மையிலிருக்குங்கால் அவற்றின் இடையில் பூமிக்குச் சமமான 27 கோளங்களை நேர் கோட்டில் வைத்து அந்த இடத்தை அடைத்து விடலாம். பூமியைச் சுற்றி ஒன்பது தடவை ஒரு விமானத்தில் சுற்றினால், எவ்வளவு தொலைவு கடக்க வேண்டுமோ அதே தூரம்தான் பூமியினின்றும் திங்களுக்குச் செல்லும் தொலைவும் இருக்கும். அண்டவெளி அளவைகளில் (Cosmic Scale) கணக்கிட்டால் பூமிக்கும் திங்களுக்கும் இடையேயுள்ள தொலைவு மிகச் சிறியது. பூமிக்கு மிக அருகிலிருக்கும் ஏனைய கோள்களின் தொலைவைவிட நூற்றுக் கணக்கான மடங்கு குறைவாகவே உள்ளது. இதன் காரணமாகவே இது தொலை உலகச் செலவிற்கு முதலில் செல்லும் உலகமாகத் தேர்ந்தெடுக்கப்பெற்றது. அமெரிக்காவும் இரஷ்யாவும் இப்பயணத்தில் பெரு முயற்சி எடுத்து வெற்றி பெற்றன.