பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது மக்களின் கருத்திலும் இடம் பெற வாய்ப்பு ஏற்பட்டு அவர்களிடமும் அக்குறிக்கோள் உணர்வு வளர்கின்றது. இங்ங்னம் அறக்கட்டளைப் பொழிவுகளுக்கு ஒரு நிரந்தர வடிவம் தந்துகொண்டிருக்கும் பேராசிரியர் ரெட்டியார் எல்லோர் பாராட்டுதலுக்கும் உரியவராகின்றார். அத்தகைய தமிழன்பருக்கு என் ஆசியும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரித்தாகுக. ‘இயற்பியல் நோக்கில் என்ற தலைப்பில் நடைபெறும் முதற்பொழிவில் () சூரியன் (2) அணுவாற்றல் 3 விண்வெளிப் பயணம் என்ற மூன்று சிறு தலைப்புகளில் செய்திகள் புதிய பார்வையில் விளக்கப் பெறுகின்றன. பாரதியாரின் பாடல் ஒன்றினை நடுவாக அமைத்துக்கொண்டு சூரியனைப் பற்றிக் கூறும் செய்திகள் புதுமையாக உள்ளன. 'ஆதவனே ஆற்றல் மூலம் என்ற கருத்து விளக்கும் போக்கில் மனிதன், விலங்குகள், பறவைகள் இவற்றிற்குக் கிடைக்கும் உணவு வகைகள், பொறிகளுக்குக் கிடைக்கும் எண்ணெய் வகைகள், நிலக்கரி முதலிய யாவும் ஏதோ ஒருவகையில் கதிரவனிடமிருந்து பெறப்படும் ஆற்றலே என்பது வியத்தகுமுறையில் அற்புதமாக விளக்கப்பெறுகின்றன. கம்பராமாயணப் பாடல் ஒன்றினைத் துணையாகக் கொண்டு 'அணுவாற்றல் பற்றிய செய்திகள் தொடங்கப் பெறுகின்றன. இதனை விளக்கும் பேராசிரியர் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய ஜப்பான் நகரங்களில் வீழ்த்தப் பெற்ற யுரெனியம் அணுகுண்டு, புளுட்டோனியம் அணுகுண்டு இவற்றால் ஏற்பட்ட சேதங்களை முன்வைத்து அணுவாற்றலின் அற்புத விளைவுகளைக் காட்டுகின்றார். தொடர்ந்து அணுவின் நுட்பம், அணுவகைகள் பெயரிடும் முறை. உட்கருவின் பிணைப்பாற்றல், அணுவகைகள், குறிப்பாக ஐசொடோப்புகள், மருத்துவத்துறை. உழவுத்துறை. உயர்வகைத் தாவரங்கள் உற்பத்தி, தொழில் துறை இவற்றில் பயன்படும் முறைகள் அற்புதமாக விளக்கப் பெறுகின்றன. இந்த விளக்கத்திற்குப் பேராசிரியரின் இலக்கிய துண்ணறிவு பெரிதும் கைகொடுத்து உதவுவதைக் காணலாம்; சான்றுகளாகக் காட்டப் பெறும் பாடல்கள் நூலாசிரியரின் பரந்த இலக்கிய அறிவையும் பறைசாற்றுகின்றன. - விண்வெளிப் பயண விளக்கத்தைத் தொடங்குமுன் நமது அண்டை உலகுகளின் இருப்பைப் பற்றி விளக்குவது அவர்தம் ஆசிரியப்பாங்கினைக் காட்டுகின்றது.அடுத்து விண்வெளியையும் விரிவாக விளக்குவது அடிப்படை அறிவியலறிவு இல்லாதவர் களும் செய்திகளைப் புரிந்து கொள்ளத் துணையாக அமைகின்றது.