பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணவை முஸ்தபா

33


இதற்கு நமக்குப் பெருந்துணையாயமையவல்ல பெரும் துறை இலக்கியத் துறையாகும். அதிலும் படைப் பிலக்கியத் துறை வாயிலாக இதனை எளிதாகச் சாதிக்க முடியும் என்பது திண்ணம்.


பட்டறிவின் வெளிப்பாடே கலையும் இலக்கியமும்

கலையும் இலக்கியமும் பட்டறிவின் வெளிப்பாடு களாகும். உலகிலுள்ள அனைத்துக் கலைகளுமே மனிதனின் பட்டறிவுத் திரட்சியாக முகிழ்த்து மணம் பரப்பிவருவன வாகும்.

ஆதியில் மனிதன் விலங்கோடு விலங்காகக் காட்டில் வாழ்ந்தபோது மந்தமாருதம் தென்றல் வீசும் மாலை நேரத்தில் வண்ணத் தோகையினை விரித்தாடும் அழகு மயிலின் ஒய்யார ஆட்டத்தைக் கண்டு மகிழ்ந்த மனிதன் தானும் அதுபோல ஆடவேண்டும் எனும் வேட்கை கொண்டான், நடனக்கலை பிறந்தது. செவிக்கு இன்ப மூட்டும் குயிலின் குரலினிமையைக் கேட்ட மனிதன் தானும் அதைப் போல இன்னோசை எழுப்ப விழைந்தான், இசைக்கலை எழுந்தது, தன் உணர்வுகளையும் சிந்தனை யையும் ஒலி மூலம் பிறருக்கு உணர்த்த முற்பட்டான் மொழிக்கலை முளைத்தது. தன் ஒலிகளை வரிவடிவில் பதிய முற்பட்டான் எழுத்துக் கலை முகிழ்த்தது.

இவ்வாறு கலைகள் அனைத்தும் மனிதர்களின் பட்ட றிவின் வெளிப்பாடுகளாகவே உருவெடுத்துள்ளன என்பது தான் வரலாறு உணர்த்துகிற உண்மை. இக்கலைகளிலெல் லாம் ஆற்றல்மிகு கலை-காலந்தொறும் அழியாத் தடம் பதித்து வளர்ந்து வரும் பெரும் கலை இலக்கியக் கலை யாகும்.