17
தமிழன் மாண்பு
தமிழனின் தனிச் சிறப்புகளுள் ஒன்று, தன் சிந்தனையோட்டத்தைக் குறுகிய வட்டத்திற்குள் முடக்கிக்கொள்ள விழையாததோடு அஃதை உலகளாவிய முறையில் பரந்த சிந்தனையாகக் கொண்டிருப்பதாகும் உலகையே தன் ஊராகவும் உலக மக்களையெல்லாம் தம் உறவினர்களாகவும் கருதி 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' எனக் கொண்டாடி மகிழும் தமிழன், நாடு, மொழி, இன, நிற சமய வேற்றுமைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு உலக மக்களை இதயத்தோடு இணைத்து உறவு பாராட்டி மகிழும்பெற்றியினனாவான். தமிழனின் இத்தனித்துவ மிக்கக் குணச் சிறப்பை நாமக்கல் கவிஞர்,
"தமிழன் என்றொரு இனமுண்டு
தனியே அவர்க்கொரு குணமுண்டு"
எனக் கூறி மகிழ்ந்தார். 'யார் என்பதை பாராமல் என்ன என்பதில் மட்டும் கருத்தைச் செலுத்துவது' தான் தமிழனின் தனிப்பெரும் குணவியல்பாகும்.
வியாபாரத்திற்கென கடல் கடந்து வந்த வணிகப் பெருமக்கள் தமிழகச் கடற்கரைப் பகுதிகளில் நீரோடு நீர் கலந்தாற்போல் தமிழ் மக்களோடு ஒன்றிணைந்து பழகி வாழும் தன்மையை,
"கலம் தருதிருவிற் புலம்பெயர் மாக்கள்
கலந்திருந் துறையும் இலங்குநீர் வரைப்பும்"
எனச் சிலப்பதிகாரம் புகழ்ந்துரைப்பதன் மூலம் நாடு, மொழி, இன, சமய, நிற பேதமுள்ள அந்நிய மக்களிடம் எவ்வித வேறுபாடுமின்றி தமிழ் மக்கள் பழகிய பான்மையை அறிந்தின்புறுகிறோம்.