பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



19. கொல்லிப்பாவை


உற்சாகமும் இலக்கிய ஆர்வமும், உயர்ந்த நோக்கமும் கொண்ட இளையவர்கள் சிலர், அல்லது இளைஞர் ஒருவர், நல்ல முறையில் இலக்கியப் பத்திரிகை ஒன்று நடத்த ஆசைப்படுவதும், அதற்காகப் பாடுபடுவதும், சிரமங்களை மேற்கொள்வதும் இயல்பாக இருக்கிறது. அப்படி ஒரு குழுவால், அல்லது தனி நபரால், ஆரம்பிக்கப்படுகிற சிறு பத்திரிகை இலக்கியவாதிகளையும் உற்சாகிகளையும் வசீகரிக்கிறது. அம்முயற்சியில் ஒத்துழைக்கப் பலர் வந்து சேர்கிறார்கள். இவர்களில் ஓரிருவர், கூடிய சீக்கிரமே பத்திரிகையின் போக்கையும், அதன் ஆசிரியரது நோக்கையும் திசைதிருப்பிவிட்டு, கோளாறான தடத்திலே செலுத்துகிறார்கள். கால ஓட்டத்தில், உயர்ந்த நோக்குடன் செயல்படத் துவங்கிய முயற்சி சீர்கெட்டுப் போகிறது. சாதனைகள் பல புரியக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிற பத்திரிகை ஏமாற்றம் அளிக்கிற காரியமாக வீணாகிப் போகிறது.

தமிழ்ச் சிறு பத்திரிகை வரலாற்றில் இதற்கு உதாரணமாக அமைந்தவை பலவாகும். முக்கியமாகக் குறிப்பிடத்தகுந்தது கொல்லிப்பாவை.

திருவனந்தபுரத்தில் ஹாஸ்டல் அறை ஒன்றில் வசித்து வந்த அ. ராஜமார்த்தாண்டனுக்கும், அவருடைய கவிநண்பர் ஒருவருக்கும் நல்ல முறையில் இலக்கியப் பத்திரிகை நடத்த வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. 'கலி' என்ற பெயரில் ஒரு இதழ் தொடங்க முயன்றார்கள். ஏழெட்டு மாதங்களாகியும் அவர்கள் முயற்சியும் உழைப்பும் செயல் வடிவம் பெறாமலே தேங்கி நின்றன. கவிநண்பர் ராஜமார்த்தாண்டனிடமே முழுப் பொறுப்பையும் ஒப்படைத்தார். பின்னரும் காலம் ஓடியது.

காலதாமதத்துக்காக மன்னிப்புக் கோரியவாறே, ராஜமார்த்தாண்டன் 'கொல்லிப்பாவை' என்ற பெயரில், பத்திரிகையின் முதல் இதழை 1976 அக்டோபரில் வெளியிட்டார். இந்தப் பெயரைத் தேர்ந்து சொன்னவர் தருமு ஔரூப் சிவராம் என்றும் அவர் நன்றியுடன் அறிவித்தார்.

முதல் இதழில் காணப்பட்ட அறிவிப்பின் இறுதிப் பகுதி இது :