பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

வல்லிக்கண்ணன்


விளக்கம், தருமு சிவராமின் பிரதிரூப சம்வாதம்- இவை தவிர மற்றைய கட்டுரைகள் எல்லாம். ஏதோ நிர்ப்பந்தத்தை ஒட்டி வெளியானவை போன்று தெரிகிறது. கட்டுரை என்ற கருவி கூட 'தனிமனித தூவிப்பு'க்காக அதிகம் உபயோகிக்கப்பட்டிருக்கிறது. உபயோகித்தவர் யாராக இருந்தாலும் சரி, கட்டுரை பொறுப்புணர்வுக்காக வெளியிடுவதை விட்டு சிற்சில சமயங்களில் நட்பிற்காகவும், 'இந்த உறவு முறிந்துபோய் விடுமோ' என்ற பயத்திலும் வெளியிட்டிருப்பது தெரிகிறது. வெ. சா, த. சிவராம், ஞா. கூ. இவர்களுக்கிடையில் நடைபெற்ற பேனாச் சண்டைக்கு ஒரு களமாக இருந்ததே கொல்லிப்பாவை இப்படிக் களமாக இருந்ததற்கு கொ. பா. வுக்கு எந்த விதத்திலும் கெளரவம் ஏற்பட்டுவிடாது.”

பாராட்டப்பட வேண்டிய சில நல்ல விஷயங்களையும் 'கொல்லிப்பாவை' பிரசுரித்திருக்கிறது.

உலக இலக்கியத்தில் சாதனைகள் புரிந்துள்ள பெரிய படைப்பாளிகள் குறித்து 'கொல்லிப்பாவை' சிறு அளவில் அறிமுகக் கட்டுரைகள் வெளியிட்டு வந்தது. நட்ஹாம்சன், கிரேசியா டெலடா, ஸெல்மா லாகர்லெவ் போன்றவர்களையும் அவர்களது படைப்புகளையும் பற்றித் தமிழ் இலக்கியப் பிரியர்கள் ஓரளவுக்கேனும் அறிந்து கொள்வதற்கு இக்கட்டுரைகள் உதவின.

தமிழ்ச் சிறுகதையில் தனித்தன்மையோடு படைப்புகள் உருவாக்கிச் சிறப்புடன் திகழ்ந்த கு. அழகிரிசாமி பற்றி, அவருடைய நெருங்கிய நண்பரான கி. ராஜநாராயணன் ஒரு நீண்ட கட்டுரை எழுதியிருந்தார்.

'செல்லையா கு.அழகிரிசாமியானது' என்ற அந்த 13 பக்கக் கட்டுரை 'கொல்லிப்பாவை' வரலாற்றில் மிகுந்த சிறப்புடைய விஷயம் ஆகும்.

வெங்கட் சாமிநாதன் எழுதிய 'இரண்டு தலைமுறைகளுக்கிடையில்' பல உண்மைகளைச் சுட்டிக்காட்டி வாசகர்களைச் சிந்திக்கத் தூண்டிய ஒரு கட்டுரையாக அமைந்திருந்தது.

சுந்தர ராமசாமியின் 'உடல்' என்கிற சோதனை ரீதி நாடகம் குறிப்பிடத்தகுந்தது.

அதைத் தொடர்ந்து இரண்டு சிறுகதைகள் சோதனை ரீதியில் எழுதப்பட்டு வெளிவந்தன.