பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

121


‘கொல்லிப்பாவை' சிறுகதைத் துறையில் அதிக அக்கறை காட்டியது என்று சொல்வதற்கில்லை. அதில் அதிகமான கதைகள் பிரசுரம் பெற்றதில்லை. பிரசுரமான கதைகளும் நினைவில் நிற்கத் தக்கனவாககுறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியனவாக-விளங்கவில்லை.

கொ. பா. புதுக் கவிதையை ஆதரித்தது. ஆயினும் 'எழுத்து' போல் பரவலான உற்சாகத்தை விதைத்து அதிகம் பேரை எழுதத் தூண்டவில்லை. ஒரு சிலரது கவிதைகளே அடிக்கடி வெளிவந்துள்ளன, பிரேமிள்ஜி என்றும், பாதுச்சந் ரூஃப் ப்ரேமிள் என்றும் தருமு சிவராம் கவிதைகள் எழுதியிருக்கிறார். மற்றும் நாரனோ ஜெயராமன், உமாபதி, தேவதச்சன், நகுலன், தேவதேவன், கலாப்ரியா, லக்ஷ்மி கண்ணன், சகதேவன் கவிதைகளும் கொல்லிப்பாவை இதழ்களில் வந்திருக்கின்றன.

அபூர்வமாக மொழிபெயர்ப்பில் ஆர்வம் காட்டியது கொ. பா. சில கவிதைகள் தமிழாக்கம் பெற்றுள்ளன. கெ. ஐயப்ப பணிக்கர் மலையாளத்தில் எழுதிய ஒரு கட்டுரை 'பார்வையாளன்' ( நாடகம் சம்பந்தப்பட்டது) மொழிபெயர்ப்பாக வந்தது.

தமிழில் மாதந்தோறும் புதிய புத்தகங்கள் நிறைய வந்து கொண்டிருக்கின்றன. சிறுகதைத் தொகுப்புகள், நாவல்கள், புதுக் கவிதை மற்றும் மரபுக் கவிதைத் தொகுப்புகள்-இப்படிப் பல பிரிவுகளிலும் புத்தகங்கள் வருகின்றன. பல வருஷங்களாக வந்துள்ளன. இவற்றில் முக்கியமான சிலவற்றையாவது- முக்கியமான சிலரது எழுத்துக்களையாவது- இலக்கியப் பத்திரிகைகள் என்று சொல்லிக் கொள்கிறவை விமர்சித்தால் நல்லது.

தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் சிதறி இருக்கின்ற இலக்கியப் பிரியர்கள் தமிழில் வெளிவந்திருக்கிற-வந்து கொண்டிருக்கிற-புத்தகங்கள் பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வம் உடையவர்களாக இருக்கிறார்கள். பத்திரிகைகளில் வரக்கூடிய 'நூல் அறிமுகம்', 'புத்தக மதிப்புரை' பகுதிகள் அவர்களுக்கு உதவக்கூடும். சிறு பத்திரிகைகள் இந்தப் பணியை நன்கு செய்ய முடியும் செய்ய வேண்டும்.

ஆனால், செய்வதில்லை. தமிழில் பல நல்ல நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. அவை உரிய கவனிப்பைப் பெறாமல் இருட்டில் ஆழ்ந்து கிடக்கின்றன. சிறு பத்திரிகைகள் அத்தகைய வெளியீடுகள் குறித்து அறிமுகக் கட்டுரைகளும், விமர்சனங்களும் வெளியிடலாம்.