பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

வல்லிக்கண்ணன்


ஆனால், செய்வதில்லை. ஆசை நிறைந்த திட்டத்தை, கொள்கையை வெளியிட்ட 'கொல்லிப்பாவை' கூட இப்படிப்பட்ட பயனுள்ள காரியத்தைச் செய்ய முன்வரவில்லை.

அதன் பிற்காலப் பகுதியில், கொ. பா. புத்தக மதிப்புரைகளைப் பிரசுரித்தது. ஆனால், அதிலும் 'வேண்டுதல் வேண்டாமை' நோக்கே தென்படுகிறது. தனக்குத் தெரிந்தவர்கள், வேண்டியவர்கள் புத்தகங்களைப் பாராட்டுவதும், வேண்டாதவர்கள்- மற்றவர்கள் புத்தகங்களைக் குறை கூறுவதும் கிண்டல் செய்வதுமான தொனியே இக்கட்டுரைகளில் மேலோங்கி நிற்கின்றது.

வேதசகாயகுமார் எழுதிய 'தமிழ்ச் சிறுகதை வரலாறு' பற்றி நகுலன் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். வெங்கட்சாமிநாதனின் 'அக்ரகாரத்தில் கழுதை' பற்றி சில கட்டுரைகள், சாகித்திய அகாடமிப் பரிசு பெற்ற தி. ஜானகிராமனின் 'சக்தி வைத்தியம்' சிறுகதைத் தொகுப்பு பற்றி வேதசகாயகுமார் விமர்சனம், பாப்ரியாவின் இரண்டு கவிதைத் தொகுதிகள், செவ்வண்ணனின் 'திசை தெரிந்த அம்புகள்' (கவிதை) பற்றி அபிப்பிராயங்கள்-இவ்வளவுதான் கொல்லிப்பாவையின் கவனிப்பைப் பெற்றுள்ளன.

“விமர்சனமும் இலக்கியமாக, இலக்கிய அக்கறை கொண்ட விமர்சனப் பார்வைகள் வளர ஒரு களம் அமைத்துச் செயல்பட வேண்டும் என்பது கொல்லிப்பாவையின் நினைப்பு” என்று அறிவிக்கப்பட்டிருந்தது செயல்வடிவமாக மலர்ச்சி பெறவேயில்லை என்பது வருத்தத்துக்கு உரியது.

'கொல்லிப்பாவை' 1981-ல் ஒன்றோ இரண்டோ வெளிவந்தது. 1982- ல் அது பிரசுரம் பெற்றதாகத் தெரியவில்லை.