பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

17


காந்திய லட்சியத்துடன், தேச விடுதலைப் போராட்டத்தில், சங்கு தீவிரமான பங்கு ஆற்றியது. விறுவிறுப்பும் வேகமும் நிறைந்த கட்டுரைகளே அதில் வந்து கொண்டிருந்தன. அதன் விளைவாக, பிரிட்டிஷ் ஆட்சியின் அடக்குமுறைக்கு அது இலக்காயிற்று.

பின்னர், 1932-ல் ‘சுதந்திரச் சங்கு‘ மீண்டும் தோன்றியது. “தமிழ்த் தொண்டுதான் சங்குக்கு மூச்சு” என்று அறிவித்து வளர்ந்த அது மாதம் இருமுறை வெளிவந்தது. தி. ஜ. ரங்கநாதன் ( தி. ஜ. ர. அதன் துணை ஆசிரியராகப் பணியாற்றினார்.

சமூகப் பிரச்னைகள் பற்றிய கட்டுரைகள், சிந்தனைகள், ‘சங்கு‘ வில் இடம் பெற்றிருந்தன. வ. ரா. ந. பிச்சமூர்த்தி, கு. ப. ராஜகோபாலன், சிட்டி ஆகியோர் அதில் தொடர்ந்து எழுதியிருக்கிறார்கள். புதுமைப்பித்தனின் ஆரம்பகாலக் கதைகள் சிலவும் அதில் இடம் பெற்றுள்ளன. சி. சு. செல்லப்பாவின் கதை ‘சுதந்திரச் சங்கு‘ வில்தான் பிரசுரமாயிற்று. அதன் பிறகு அவ்வப்போது அவர் அதில் கதை எழுதியுள்ளார்.

‘சுதந்திரச் சங்கு‘ என்ற இலக்கியப் பத்திரிகையில் முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியது அதன் ஆசிரியர் பக்கம் ஆகும். சங்கு ஆசிரியர் புதிய எழுத்தாளர்களுக்கு ஊக்கம் அளித்து உற்சாகம் ஊட்டினார். திறமையைக் கண்ட இடத்து, அதை வரவேற்றுப் பாராட்டி அதன் வளர்ச்சிக்கு உதவும் வகையில் யோசனைகள் கூறி ஆதரித்தார். தமிழ்ச் சிறுகதைகளின் வளர்ச்சிக்கான ஆலோசனைகள், உரைநடை பற்றிய கருத்துக்கள், கட்டுரை சம்பந்தமான சிந்தனைகள் - இப்படிப் பலவகைகளிலும் பயனுள்ள விஷயங்களை ஆசிரியர் பக்கம் எடுத்துச் சொன்னது. சங்கு சுப்பிரமணியமும் தி. ஜ. ர. வும் இத்தகைய எண்ணங்களை எழுதி வழிகாட்டியிருக்கிறார்கள்.

1930களின் ஆரம்ப கட்டம் அரசியல் விழிப்பு மிகுந்திருந்த காலம். மகாத்மா காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கம் மும்முரமாக நடை பெற்றுக் கொண்டிருந்தது. அரசியல் போராட்டத்துடன் சமூகச் சீர்திருத்தமும் மொழி வளர்ச்சியும் வலியுறுத்தப்பட்டன.

அந்தக் காலகட்டத்தில் இந்திய நாட்டின் பல மொழிகளிலும் மறுமலர்ச்சி வேகம் பெற்றிருந்தது. அதற்காகப் பல பத்திரிகைகள் பாடுபட்டன. தமிழிலும், ‘சுதந்திரச் சங்கு‘ வுடன் ‘காந்தி‘, ‘ஜெயபாரதி‘ போன்ற சிறு பத்திரிகைகள், காலணா விலையில் மக்களைத் தொட முயன்று வந்தன.

த2