பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

வல்லிக்கண்ணன்


குழுவினரின் செயல்பாட்டை அதன் நிதர்சனத்தில் எதிர்கொள்ளாமல், தான் வெறுக்கும் தனி நபரின் மீதுள்ள காய்ச்சலை மட்டுமே- குழுவின் செயல்பாட்டின் மீது சேற்றை வாரி இறைவதுதான் உண்மையில் Politicking தனி நபர் தாக்குதல். தனி நபர் அரசியல்'

‘இரண்டாவது ஆண்டின் தொடக்கத்தில்'-13-ம் இதழில்- யாத்ரா இவ்வாறு கூறியது.

‘யாத்ரா' ஒரு குழுவினரின் முயற்சி என்று கூறப்பட்டு வந்த போதிலும், அதில் வெங்கட்சாமிநாதன் குரலே தொனித்துக் கொண்டிருந்தது. அவரது கருத்துக்களை, சிந்தனைகளை விருப்பு வெறுப்புக்களையே அது எடுத்துக் காட்டியது என்பதை அந்தப் பத்திரிகையின் வாசகர்கள் நன்கு உணர முடிந்தது.

வெங்கட்சாமிநாதன் எழுத்தாற்றல் உடைய சிந்தனையாளர். தனக்கெனத் தனிப்பார்வைகளும் கருத்துக்களும் கொண்டவர். அவற்றை ‘எழுத்து' காலம் முதல் அவர் அழுத்தமாகப் பதிவு செய்து வந்திருக்கிறார்.

'எழுத்து' மூலம் அறிமுகமான சிந்தனையாளர்- எழுத்தாளர்களில் வெங்கட்சாமிநாதனும் தருமு சிவராமும் முக்கியமானவர்கள். இவ்விருவரும் பரஸ்பரம் வியந்துகொண்டும் பாராட்டியும், தமிழ் எழுத்தாளர்கள்-தமிழ் கலாசாரம்-தமிழர் போக்கு முதலியவற்றைக் காரசாரமாகக் குறை கூறியும் விமர்சித்தும் எழுதிக் கொண்டிருந்தார்கள். இருவருமே நீளம் நீளமான கட்டுரைகள் எழுதும் இயல்பினர்

காலவேகத்தில், இவ் இருவரும் தனித்தனி 'கட்சி' ஆயினர். வெங்கட்சாமிநாதனுக்குப் பல அபிமானிகளும் ஆதரவாளர்களும் உண்டு; தருமு சிவராமுவுக்கும் பல அபிமானிகளும் ஆதரவாளர்களும் உளர்.

இருவரும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் அளவுக்கு அதிகமாகப் பாராட்டிக் கொண்டிருந்ததை மறந்துவிட்டு, பரஸ்பரம் தீவிரமாகவும் அதிகமாகவும் குறைகூறவும், பரிகசிக்கவும், பழித்துரைக்கவும் நீள நெடும் கட்டுரைகள் எழுதலாயினர். இவை எல்லாம் சிறு பத்திரிகைகள் பலவற்றின் பக்கங்களை ரொப்பின.

சிறு பத்திரிகைகளின் ஆரோக்கியமான வளர்ச்சியை இவ்விருவரும் பல வருட காலம் பாதித்து வந்திருக்கிறார்கள். இதை நான் சந்தர்ப்பம் நேரிட்டபோதெல்லாம் கூறி வருகிறேன். இக்கட்டுரைத் தொடரிலும் உரிய இடங்களில் குறிப்பிட்டிருக்கிறேன்.