பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

177


வெங்கட்சாமிநாதனின் அபிமானிகள் சிலர்-அவருடைய எழுத்துக்களைத் தொகுத்து புத்தகமாக வெளியிடுவதற்காகவே தனியாக ஒரு பதிப்பகம் அமைத்தவர்கள்-அவருடைய கருத்துக்களையும் சிந்தனைகளையும் மேலும் எடுத்துச் சொல்வதற்காக 'கருத்துக்களுக்கேயான களன்’ ஆன 'யாத்ரா' வை நடத்த முன்வந்தார்கள். ஆகவே, அதில் வெங்கட் சாமிநாதன் சிந்தனைகளும், அவருடைய கருத்துக்களை ஆதரிப்போர் (மற்றும் பிரதிபலிப்பவர்) எண்ணங்களுமே பெரும்பாலும் இடம் பெற்றதில் வியப்பில்லை.

வெங்கட்சாமிநாதனின் சிந்தனை ஓட்டத்தையும் பார்வை வீச்சையும் அவருடைய 'பாலையும் வாழையும்', 'ஒரு எதிர்ப்புக் குரல்' போன்ற நூல்களில் பரக்கக் காணலாம்.

சுருக்கமாகச் சொல்வதானால்

அவர் எதிர்மறை அணுகுமுறையாளர். தமிழ் மண் பாலைத் தன்மை உடையது. பசுமையான, வளமான விஷயங்கள் இங்கு வேரூன்ற முடியாது. இந்நாட்டினருக்கே சுயசிந்தனை கிடையாது. கலை, இலக்கியம் எதிலுமே உன்னதங்களை அறிய முடியாதவர்கள், தொட இயலாதவர்கள் இங்கே இருப்பவர்கள். உயர்ந்த விஷயங்களை உருவாக்கக் கூடிய ஆற்றல் 'உள்வட்டம்' ஆன ஒரு சிலருக்குத்தான் உண்டு. அவர்களின் தாக்கத்தால் விழிப்பு பெறும் வெளிவட்டம் சிறிது பரவலாகச் செயல்படக் கூடும்...

இந்த ரீதியில் வளர்வது அவருடைய சிந்தனை.

இது 'யாத்ரா’ வின் பக்கங்களிலும் ஒளிவீசக் காணலாம். ஒரு உதாரணம்—

‘உண்மையில் எங்களுக்கு மன வேதனையைத் தரும், சலிப்புத் தட்ட வைக்கும், இந்த பிராப்தங்களை என்னடா செய்வது என்று வெறுப்புடன், ஒரு புழுவைப் பார்ப்பதுபோல, சாக்கடையில் கால் வைத்து விட்டது போல, எங்களை அருவருப்பு கொள்ளச் செய்வது, இன்றைய தமிழ்ச் சூழலில், கருத்துலகில், இலக்கிய உலகில் காணும் கோழைத்தனம், பாமரத்தனம், அறிவு சூன்யம்.

யாரும் எத்தகைய கருத்துப் பரிவர்த்தனையும் கொள்ளத் தயாராயில்லை. தைரியமில்லை. அதற்கு வேண்டிய ஸ்டாக் அவர்களிடம் அறவே இல்லை. அறைக்குள் உட்கார்ந்துகொண்டு, தங்கள் சகாக்களின் ஆதரவு அணைப்பில் முனணுமுணுத்துக் கொள்கிறார்கள்.