பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

185


வெளிச்சப்படுத்த விரைதல், பெயர் பெற்றவர்களைப் பழித்தலும் பரிகசித்தலும் போன்ற செயல்களில் உற்சாகமாக ஈடுபடுகிறார்கள். 1970 களில் சிறு பத்திரிகைக்காரர்கள் வெங்கட்சாமிநாதன், தருமு சிவராம் கட்டுரைகளை விரும்பிப் பிரசுரித்ததற்கு இதுவும் முக்கிய காரணமாகும்.

இ. வெ. வட்டமும் சில சமயம் இப்படிச் செயல்பட்டிருக்கிறது. உதாரணத்துக்கு, 'திருட்டு மாம்பழமும் தித்திக்கவில்லை' என்ற கௌதமன் கட்டுரையைக் குறிப்பிடலாம்.

க. நா. சுப்ரமண்யம் படைத்துள்ள நாவல்கள் பற்றியோ, அவரது இலக்கிய விமர்சனங்கள், க. நா. சு.வின் இலக்கிய விமர்சனங்களில் காணப்படுகிற குறைபாடுகள் போன்ற எதைப்பற்றியும் இ. வெ. வ. தனது வாசகர்களின் கவனத்துக்குக் கொண்டுவர ஆசைப்பட்டதில்லை. ஆனால் திடீரென்று க. நா. சு. வின் இலக்கியத் திருட்டு பற்றி விரிவான கட்டுரையை வெளியிட முன்வந்தது.

திருட்டு மாம்பழம் தித்திக்காமலா இருக்கும் என்ற தன்மையில் இலக்கியத் தழுவலைக் கேலி செய்து க. நா. சு. எப்பவோ எழுதிய வரிகளை எடுத்துக் காட்டி, க. நா. சு. வும் திருடியிருக்கிறார்; ஆனால் அந்தத் 'திருட்டு மாம்பழம் தித்திக்கவில்லை' என்று கட்டிக் காட்டுகிற கட்டுரை அது. கட்டுரையாளர் தனது விமர்சனத்துக்கு எடுத்துக் கொண்டது, க. நா. சு. என்றோ எழுதி வெளியிட்ட 'இரண்டு பெண்கள்' என்ற சிறு நாவல். அது பால் சாக்கின் ‘கிழவன் கொரியாத்' (பெரி கொரியாத்) என்ற படைப்பின் திருட்டு ஆகும் தானே திருட்டு வேலை செய்திருப்பவர்—அதுவும் திறமைக் குறைவோடு செய்திருப்பவர்—இலக்கியத் திருட்டு பற்றிப் பரிகசிப்பது வேடிக்கைதான் என்று எடுத்துச் சொல்வதற்காக அக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

பெரியவர்கள், பெயர் பெற்றவர்கள் செய்கிற தவறுகளை சுட்டிக் காட்டுவது சரியல்ல என்று நான் சொல்ல வரவில்லை. அவர்கள் செய்திருக்கிற அரும்பெரும் காரியங்களை மறைத்துவிட்டும், மறந்து விட்டும் சின்னத் தவறுகளையும் குறைபாடுகளையும் பெரிதுபடுத்த முன்வருவது நேர்மையுமல்ல, நியாயமும் இல்லை என்றே குறிப்பிட விரும்புகிறேன்.

இ. வெ. வ. மொழிபெயர்ப்புக் கட்டுரைகளையும் வெளியிட்டது. ‘கொச்சைக் கலாச்சாரம் கொள்ளை நோய்—எலெனா கார்ட்ஸெவா புத்தகம் பற்றி ஆன்ட்ரீ நுய்கின் மதிப்புரை', கலை இலக்கியம் பற்றி