பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

வல்லிக்கண்ணன்


அளவு) ஆர்ட் அட்டை, பல வர்ண அட்டைச் சித்திரம் எல்லாம் கொண்டு வெளிவந்தது.

மணிக்கொடி வாரப் பத்திரிகையின் முக்கியஸ்தர்களில் ஒருவரான டி. எஸ். சொக்கலிங்கம் அந்நாட்களில் 'காந்தி' என்றொரு பத்திரிகை நடத்தினார். 'சுதந்திரச் சங்கு' மாதிரி காலணாப் பத்திரிகை. அரசியல் வேகமும் விறுவிறுப்பும் நிறைந்த விஷயங்கள் அதில் வந்தன. இதரரகக் கட்டுரைகளும் கதைகளும் உண்டு. அந்த 'காந்தி' மணிக்கொடியுடன் இணைக்கப்பட்டுள்ளதாக மணிக்கொடியின் ஒவ்வொரு இதழிலும் அச்சிடப்பட்டு வந்தது.

மணிக்கொடியின் அமைப்பும் உள்ளடக்கமும், நோக்கும் போக்கும் முற்றிலும் மாறுபட்டுவிட்ட போதிலும், அது பழைய வாரப் பதிப்பின் தொடர்ச்சியாகவே கணக்கிடப்பட்டது. கதைப் பத்திரிகையின் முதல் இதழ் 'கொடி 3, மணி 1' என்று இலக்கம் பெற்றிருந்தது.

இந்த முதல் இதழில் புதுமைப்பித்தனின் 'துன்பக்கேணி', சி. சு. செல்லப்பாவின் ‘ஸரஸாவின் பொம்மை', பி. எஸ். ராமையாவின் 'புலியின் பெண்டாட்டி', சங்கு சுப்பிரமணியனின் 'வேதாளம் சொன்ன கதை' முதலியன பிரசுரம் பெற்றன.

தமிழில் சிறுகதைக்கு என்று தனியாக ஒரு பத்திரிகை இல்லாத குறையை நீக்குவதற்காகவும், பிற நாட்டவர் கண்டு போற்றும்படியான உயர்ந்த கதைகளை எழுதக்கூடிய தமிழ் எழுத்தாளர்களை வெளிப்படுத்தவும், 'மணிக்கொடி' தோன்றியுள்ளது என்று பி. எஸ். ராமையா முதல் இதழில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தச் சாதனையை மணிக்கொடியின் பிந்திய இதழ்கள் செய்து காட்டின. புதுமைப்பித்தன், ந. பிச்சமூர்த்தி, கு. ப. ராஜகோபாலன், பி. எஸ். ராமையா, ந. சிதம்பரசுப்பிரமணியன், பெ. கோ. சுந்தரராஜன் (சிட்டி), சி. சு. செல்லப்பா, மௌனி ஆகிய படைப்பாளிகளின் சிறந்த கதைகள் பலவற்றை மணிக்கொடி வெளியிட்டுள்ளது. பின்னர் க. நா. சுப்ரமண்யமும் இக்குழுவில் சேர்ந்தார். கி. ரா. எம். வி. வெங்கட்ராம், ஆர். சண்முக சுந்தரம், லா. ச. ராமாமிர்தம் முதலிய படைப்பாளிகளை அறிமுகப்படுத்திய பெருமையும் மணிக்கொடிக்கு உண்டு. . பிச்சமூர்த்தியின் 'தாய்' என்ற கதையைப் பிரசுரித்தது பற்றிக் குறிப்பிடும்போது, பி. எஸ். ராமையா இவ்வாறு எழுதுகிறார்-

'பிச்சமூர்த்தியின் தாய் என்ற கதை மிகமிக உயர்ந்த தரத்தில் உள்ளது. அந்தத் தரத்துச் சில கதைகளை வெளியிட வாய்த்ததிலேயே