பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



36. சில புதிய முயற்சிகள்


தமிழ்நாட்டின் கலை, இலக்கியப் பத்திரிகை நிலைமைகளில் அதிருப்தி கொண்டு— உலக நாடுகளில் நிகழ்கிற முயற்சிகளையும் வளர்ச்சிகளையும் கவனித்து, அவைபோல் எல்லாம் தமிழில் இல்லையே என்று மன உளைச்சல் கொண்டு— தமிழிலும் சகல துறைகளிலும் புதுமைகள் படைக்க வேண்டும் என்று ஆசையும் உந்துதலும் கொண்டு, அவ்வப்போது புதிய முயற்சிகள் சிறு பத்திரிகைத் துறையில் மேற்கொள்ளப்படுவதும் இயல்பாக இருந்து வருகிறது.

இந்த விதமான முயற்சிகளில் இரண்டு— 'காற்று’, ‘தேடல்' என்பவை ஆகும்.

‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும்— கலைச் செல்வங்கள் யாவும்—கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!' என்ற பாரதி வாக்கை குறிக்கோளாகக் கொண்டு 'காற்று' கோயம்புத்தூரில் தோன்றியது. நாடகக் கலையில் ஆர்வம் மிகக் கொண்டுள்ள கவிஞர் புவியரசு அதன் ஆசிரியர்.

‘யுகோஸ்லாவியக் கவிஞர் 'வாஸ்கோ பாப்பா' பற்றிய அறிமுகமும், அவரது கவிதைகள் சிலவும், யூஜின் அயனெஸ்கோ அறிமுகமும், அவரது நாடகமான தலைவர் தமிழாக்கமும் முதல் இதழில் தரப்பட்டிருந்தன. சத்யஜித் ரேயின் திரைப்படக் கலை சம்பந்தமான சிந்தனைகள் (அவர் பிலிம்ஸ், தேர் பிலிம்ஸ் என்ற நூலிலிருந்து எடுக்கப் பெற்றவை) 'தேடல்' எனும் தலைப்பில் இடம் பெற்றன. சி. ஆர். ரவீந்திரன் கதை ‘ஜனனம்' உண்டு.

புவியரசு எழுதியிருந்தார்—

‘சில புதிய முயற்சிகள்— பத்திரிகை, நாடகம், சினிமா முதலிய துறைகளில்.

கனவுகள் நனவாகும் காலம் இது. மனதில் உறுதியுண்டு. கருத்தில் தெளிவுண்டு. வறுமை ஒன்று தவிர வேறு எந்தக் குறையும் இல்லை. அதையும் வெல்ல வேண்டும். வெல்வோம்.

'காற்று' முதல் மடலில் வெளிநாட்டுச் சரக்கு அதிகம் என்று நீங்கள் கருதலாம். அது அப்படித்தான் இருக்கும். அதற்கு இணையான