பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

217


பத்திரிகையை நல்லமுறையில் நடத்த வேண்டும் என அவருக்கு இருந்த ஆர்வம் 'புதிய நம்பிக்கை'யின் இதழ்களில் பிரதிபலித்தது. ஆயினும் தரமான எழுத்தாளர்களின் ஒத்துழைப்பு அவருக்கு அதிகம் கிட்டவில்லை என்பதையும் ஒவ்வொரு இதழும் காட்டியது. 'புதிய நம்பிக்கை'யின் சிறப்பு அம்சங்களில் ஒன்றாக விளங்கியது, பெயர் பெற்ற படைப்பாளிகளைப் பேட்டி கண்டு, 'கண்டோம், கேட்டோம், சொல்கிறோம்' என்ற பகுதியாக வெளியிட்டது. அசோமித்திரன், நீல. பத்மநாபன், வண்ணநிலவன், வல்லிக்கண்ணன், இலங்கை எழுத்தாளர் டானியேல் ஆகியோரின் பேட்டிகள் முக்கியமானவை.

கும்பகோணம் வே. மு. பொதியவெற்பன் 'முனைவன்' என்ற காலாண்டு இதழை வெளியிட்டார். முதலில் இது இதழியல் இதழாகத் தயாரிக்கப்பட்டது. பின்னர் முனைவன் ஒவ்வொரு இதழும் ஒவ்வொரு மாதிரி உருவாக்கப்பட்டது.

மொத்தத்தில், சமுதாயப் பார்வை கொண்ட முற்போக்கு இலக்கிய ஏடு ஆகவே அது வெளிவந்தது. புத்தக மதிப்புரைப் பகுதி இதழ் தோறும் இடம்பெற்றது. இலங்கையில் நிகழ்ந்த இனவெறிப் படுகொலை பற்றி இதர பத்திரிகைகள் வெளியிடாத தன்மையில் கருத்துக்களையும் கட்டுரைகளையும் பிரகரித்துள்ளது. இதன் 11-ம் இதழில் கோ. கேசவன் ‘சிற்றிலக்கியங்கள் சில குறிப்புகள்‘ சம்பந்தமாக எழுதிய முன்னுரை, பேராசிரியர் அ. மார்க்ஸ் எழுதிய ‘பாரதியும் பகவத்கீதையும்‘ என்ற ஆய்வுரை, மற்றும் கனமான சிந்தனைக் கட்டுரைகள் இடம் பெற்றிருந்தன.

‘இது நாள் வரையில்
பாதம் மிதியாத் தளங்களின் மீதும்
கன்னிச் சுவடுகள் பதிப்போம்—இனி
எதிர்வரு நாளில்
பதிந்து பதிந்தவை பாதங்களாகப்
புதுயுகத் தடங்கள் விதிப்போம்!‘

என்ற வரிகளை லட்சிய முழக்கமாகக் கொண்டுள்ள ‘முனைவன்’ ஒவ்வொரு இதழும் நீண்ட கால இடைவெளிகளோடுதான் வெளி வந்திருக்கிறது.

குறிப்பிட்ட ஒரு வட்டாரத்தில் செய்தி, கலாச்சார ஏடாக விளங்கி, மக்களின் கலை, அரசியல், சமூக உணர்வு மட்டத்தை உயர்த்தவேண்டும் என்ற நோக்குடன் சில முற்போக்கு இதழ்கள் செயலாற்றியுள்ளன.