பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39. ஆர்வத்தின் மலர்ச்சிகள்


பத்திரிகை நடத்த வேண்டும் என்ற ஆசை யாரை எப்படிப் பிடித்து ஆட்டும் என்று சொல்வதற்கில்லை. வணிக நோக்கில் நடத்தப்படுகிற பெரிய பத்திரிகைகளையும், ஏதேதோ நோக்கில் பிறப்பிக்கப்படுகிற சிறு பத்திரிகைகளையும் பார்த்துப் பார்த்து, நாமும் ஒரு பத்திரிகை நடத்தினால் என்ன என்ற எண்ணம் அநேகரைச் செயலுக்குத் தூண்டுகிறது. தனியராகவோ, சிலர் சேர்ந்தோ பத்திரிகை நடத்தத் துணிந்து விடுகிறார்கள்.

இவர்களுடைய ஆர்வத்தின் விளைவுகள் பத்திரிகை உலகில் சாதனைகள் புரிந்துவிடுகின்றன என்று சொல்வதற்கில்லை. குறிப்பிட்டுப் பெயர் சொல்லும்படியாக நினைவில் நிற்கும் தரத்தனவாக இத்தகைய பத்திரிகைகள் விளங்கின என்றும் கூறுவதற்கில்லை.

சிறு பத்திரிகைகள், இளம் எழுத்தாளர்களின் எழுத்துக்கள் அச்சேறுவதற்கு உதவுகிற அரங்கங்கள் ஆக உதவுகின்றன. வளர்ந்து கொண்டிருக்கும் எழுத்தாளர்களின் ஆக்கங்கள் பலவும் வெளிச்சத்தைக் காண்பதற்கு இவை தாராள இடம் தருகின்றன. சிறு பத்திரிகைகள் பரபரப்பான கருத்துக்களை, விறுவிறுப்பும் வேகமும் நிறைந்த—சர்ச்சைக்குரிய எண்ணங்களை—அவ்வப்போது ஆழமற்ற மேல்பரப்புச் சிந்தனைகளாகத் தூவி வைக்கின்றன. அத்தகைய எழுத்துக்கள் வெளிவந்த சமயத்தில் அவை, சம்பந்தப்பட்டவர்களின் பேச்சுக்கும் கவனிப்புக்கும் உரியனவாக அமைகின்றன. அவ்வளவுதான்.

இந்த விதமான பத்திரிகைகள் எல்லாக் காலத்திலும் இருந்திருக்கின்றன. குதிரைப் பந்தயத்தில் ‘அவையும் ஓடின‘ என்று சொல்லப்படுவது போல, இவையும் பத்திரிகை உலகில் வந்தன, நடந்தன, இருந்தன, மறைந்தன என்று கூறலாம்.

1930—40களில் ‘பிரசண்ட விகடன்’, ‘அணிகலம்’, ‘திருமகள்‘, ‘வசந்தம்‘, 50 களில் ‘புதுமை’, ‘ரசிகன்‘, 60 களில் கன்னிக்கண்ணனின் ‘உதயம்‘ என்று பலப்பல. சரியான ‘பத்திரிகை வரலாறு‘ எழுதப் பெற்றால் பட்டியலில் சேரக்கூடிய சிறு பத்திரிகைகளின் பெயர்கள் அதிகமாகவே இருக்கும்.