பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

222

வல்லிக்கண்ணன்


பிறகும் தீவிரமாகக் கருத்துக்களை எடுத்துக் கூறியிருக்கிறார். த. கோவேந்தன், ஞானம்பாடி, ஏ. சுவாமிநாதன் ஆகியோர் உற்சாகத்துடன் ஒத்துழைக்கிறார்கள்.

புதுக் கவிதையை எதிர்த்தும், க. நா. சு. வைச் சாடியும், சரித்திர நாவல்களைக் கண்டித்தும் ஆழமில்லாத, பரபரப்பு ரீதியான, சிறு கட்டுரைகளைக் கற்சிலை வெளியிட்டிருக்கிறது.

முதல் ஆண்டு முடிந்ததும், ‘கற்சிலை‘ ‘சுயவிமர்சனம்‘ செய்து கொண்டது. அதில் பெருமையோடு இப்படி அறிவித்துள்ளது

‘கற்சிலை இதழ் மூலம் பெருத்த அளவில் பொருளாதாரம் நட்டமாகிவிட்டது என்று பொய் சொல்லிப் புலம்பிட நாங்கள் விரும்பவில்லை. அப்படிச் சொல்பவர்களைக் கண்டால் நாங்கள் மிகுந்த கோபம் கொள்கிறோம்.

நாங்கள் அறிந்தவைகளை— தெரிந்தவைகளைப் பலருக்கு அறிவிப்பதற்கும் தெரிவிப்பதற்கும் ஆயுதமாகக் கொண்டுள்ள ஒரு கருவிக்கு ஆகும் செலவை நாங்கள் ஒரு பொருட்டாகக் கருதவில்லை. எங்களுக்கு ஆயுதமே முக்கியம்! இலட்சக்கணக்கான வாசகனுக்கு எங்கள் அறிமுகம் தேவையில்லை; இலட்சியப் பிடிப்புள்ள வாசகனுக்கு நாங்கள் அறிமுகமாகிட விரும்புகிறோம்.

நாங்கள் கையில் எடுத்துள்ள ஆயுதம் சினிமா நடிகைகளுக்கும், ஏழை எளியவர்களைச் சுரண்டிக் கொழுக்கும் முதலாளியத்திற்கும் துணை போகாது. புதியதோர் உலகைச் சமைக்கப் போராடிக் கொண்டிருக்கும் புதிய தலைமுறைக்குப் போர்க் கருவியாகப் பயன்படும்.

தமிழ்ப் பத்திரிகை உலகில் நாங்கள் பெரிய சாதனை உண்டாக்க விரும்பவில்லை. ஏனெனில் இவ்வுலகில் புகழ் அடைந்துள்ள ‘சாதனை‘ , மனிதனின் சுயமரியாதைக்கும் சுதந்திரத்திற்கும் அப்பாற்பட்ட நச்சுத்தனத்தின் பேருருவே. நாங்கள் இத்தகைய ‘சாதனை‘ க்குரிய மனிதர்களைத் தோல் உரித்துக்காட்டவே எமது ஆயுதத்தைப் பயன்படுத்துவோம்.'(மலர்-2, இதழ்- 1... 16-1-74).

‘போகும் வழி நீளமென்று
புத்தி உணர்ந்தாலும்
போகும் வழி யெங்கள்

போக்குக்கு இசைந்த வழி‘ என்ற வலிய கவிதை வரிகளோடு பயணத்தைத் தொடர்ந்த கற்சிலை அதன் பிறகு நீண்ட நாட்கள் நடக்க வில்லை.