பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

235


பத்திரிகைகளின் சாதனை மறக்கக் கூடியதல்ல. ஜெயராஜ், குங்குமம், குமுதம் வகையறாக்களால், நாணயமான தமிழின் தெருக்கூத்து மரபைச் சாகக் கொடுத்துள்ளோம். அதுபோல் நகரக் கலாச்சாரங்களும் அழிகின்றன. இலக்கியப் பத்திரிகைகள் என்று கூறிக் கொள்பவை கலாச்சாரத்தின் ஓர் அங்கமான இலக்கியத்தை மட்டும் கவனிக்கின்றன அல்லது சினிமா, நாடகம் மட்டும் கவனிக்கப்படுகிறது. இப்பத்திரிகைகள் தங்களைச் சற்று உயர்த்தி கலாச்சார இதழ்களாய் மாற்றிக் கொள்ளாதபடி அவற்றின் குறுகிய இலக்கிய அறிவும், பரந்த பார்வையின்மையும் செய்கின்றன என்றாலும்—தங்களின் அஞ்ஞானத்தையும் மீறி இந்த இலக்கியப் பத்திரிகைகள் வியாபார இலக்கியத்தையும், அவற்றின் நடைமுறைகளையும் எதிர்ப்பதால் அவற்றிடம் ஓரளவு இடதுசாரித் தன்மை உண்டு என்று நம்புகிறோம். அதே நேரத்தில் சக்திமிக்க கலாச்சார இயக்கங்களாய் இப்பத்திரிகைகள்—யாத்ரா, கொல்லிப்பாவை, சாதனா, சுவடு, வைகை போன்றன— உருவாக்கம் பெற எங்கள் விமர்சனங்களையும் தாக்குதல்களையும் அவை மீது வைக்கிறோம்.

விழிகள், பரிமாணம், இலக்கிய வெளிவட்டம் போன்ற பத்திரிகைகளை நாங்கள் மிகுந்த மதிப்புடன் அரவணைக்கிறோம். இவை எங்களை ஒத்த, சமூக, இலக்கிய, கலாச்சாரப் பார்வையைக் கொண்டிருக்கின்றன. மேலும் அவை அரசியலிலும் தங்களுக்கான நிலைபாட்டைத் தேர்ந்துள்ளது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. காரணம், தமிழகச் சூழலில் இன்று செயல்படும் வெறும் இலக்கியப் பத்திரிகைகூட தன் இலட்சியத்தை உண்மையில் நிறைவேற்ற, வெறும் இலக்கிய சிரத்தை மட்டும் காட்டினால் போதாது என்பதை ஒரு சித்தாந்தமாகவே முன்வைக்கத் தயாராகி உள்ளோம்.

தற்சமயம் கலாச்சார இயக்கம் அரசியலைப் புறக்கணிக்க முடியாது என்று நினைக்கிறோம். அதற்காக நேரடி அரசியலில் ஈடுபடச் சொல்லவில்லை. உங்களுக்கென்று அரசியலிலும் ஒரு பார்வை வேண்டுமென்கிறோம். சிறு பத்திரிகைகளுக்குப் பொருந்தும் இப்பார்வை எழுத்தாளர்களுக்கும் பொருந்தும்.

மொத்தத்தில் இருவகைப் பத்திரிகைகளுக்கும் உள்ள பொதுப் பண்பு இப்போது முக்கியமாய் கவனிக்கப்பட வேண்டியது. வியாபாரக் கலாச்சாரம் என்ற அரக்கிதான் நம் எல்லோரின் முதல் குறி. காரணம், தமிழில் பத்திரிகை வியாபாரம் அமெரிக்கா மாதிரி யூதாகாரமாய்ப் பெருக ஆரம்பித்துள்ளது. சிறு பத்திரிகைகளின் முதல் எதிரி ஜனரஞ்சகப்