பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

241


முதலில் இந்தப் போக்கை எதிர்த்தது, கீழ்வெண்மணியாயிருந்தாலும் சரி, நெருக்கடி நிலைமையாயிருந்தாலும் சரி, உலகத் தமிழ் மாநாட்டு ஏமாற்றுத்தனமாயிருந்தாலும் சரி, தமிழக எழுத்தாளர்கள், அறிவாளிகள் போன்றோர் மௌனம் சாதித்தே வந்திருக்கிறார்கள். இச்சூழலில் சமூகப் பொறுப்புணர்ச்சியுடன் இலக்கு நடத்திய ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு எதிர்ப்பு தமிழகத்தின் நாலு கோடித் தமிழர்களில் ஒரு சிறு கூட்டமாவது சுய உணர்வுடன் இருக்கிறது என்பதை வரும்கால சரித்திராசிரியனுக்கு விளக்கியது.

இலக்கு என்ற அமைப்பு, இலக்கியம், திரைப்படம்—நாடகம் தொடர்பாய் தமிழ்நாட்டில் என்ன நடந்தது, எத்தகைய போக்குகள் வெளிப்பட்டன என்றெல்லாம் ஆராய்வதற்காக சென்னையில் ஒரு கருத்தரங்கு நடத்தியது.

‘சிறு பத்திரிகைகள் மத்தியில் தோன்றிய ஜனரஞ்சக எதிர்ப்பு இயக்கம் தன் சமூகப் பங்கை செயல்பாட்டுத் தளத்திலும் ஆற்ற முன் வருவது சரித்திரத்தில் முக்கியமான நிகழ்வு. இங்கு அகவயப்பட்ட இருட் குகைகளிலிருந்து வெளிப்படுவதும், புற உலகை தைரியமாய் ஏறெடுத்துப் பார்ப்பதும் சாத்யப்படுகிறது. இலக்கு செய்ய விரும்புவது போன்ற காரியங்கள் பொறுப்புடைய எல்லோராலும் ஊக்கப்படுத்தப்படும்’ என்று படிகள் எழுதியது.

படிகள் தனது வாசகர்களிடையே ஒரு சர்வே நடத்தியது. பலருக்கும் ஒரு படிவம் அனுப்பி, கேள்விகளுக்கு உரிய பதில்களை எழுதி அனுப்பும்படி கேட்டது. வந்து சேர்ந்த படிவங்களை ஒப்பிட்டு புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அவற்றை ஆய்வு செய்து, பெங்களூர் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் ஆய்வு செய்யும் பி. எஸ். ஆர். எழுதிய கட்டுரை படிகளில் பிரசுரமாயிற்று.

அந்தக் கட்டுரையின் முடிவுரை இது :

“மொத்தத்தில், சிறு பத்திரிகை வாசகர்களில் அதிகமானவர்கள் 40 வயதிற்கும் குறைவான மத்தியதர வர்க்கப் பின்னணியிலிருந்து வந்துள்ள, கல்லூரிப் படிப்புள்ளவர்கள். பலவாறான சிறு பத்திரிகைகளில் எழுதியும் வரும் இவர்கள், அதிக சமூக அக்கறையும், சமூக மாற்றத்திற்கான முயற்சிக்குச் சாதகமான மனநிலையையும் உடையவர்கள். சீரிய இலக்கிய வளர்ச்சிக்கும் சிக்கலான விஷயங்களில் விவாதங்களையும்

த-16