பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

242

வல்லிக்கண்ணன்


மேற்கொள்ளும் இவர்களிடமிருந்துதான் கலாச்சார மேம்பாட்டுச் சக்திகளைப் பெறமுடியும்.

படிகள் பாராட்டப்பட வேண்டிய ஒரு நோக்கைக் கொண்டிருந்தது. வணிக நோக்குப் பத்திரிகைகள். ஜனரஞ்சகம் என்று கூறிச் செயல்படுகின்றன. அவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சிறு பத்திரிகைகளோ வாசகர்களைக் கருத்தில் கொள்ளாது குறிப்பிட்ட ஒரு குழுவினருக்காக உருவாக்கப்படுகின்றன. இவ்விரண்டும் சரியில்லை என்று படிகள் கருதியது.

‘ஜனரஞ்சகத்திற்கும் எலிட்டிசத்திற்கும் இடைப்பட்ட சீரிய பாதையை வளர்த்தெடுக்க வேண்டும். சரியான இப்பாதை இதுவரை வளரவில்லை. வாசகரை மறுக்கும் குழு இலக்கியத்தையும், வாசகரை மயக்கும் ஜனரஞ்சகத்தையும் ஒரு சேர விமர்சிக்க வேண்டும். ஜனரஞ்சகத்தை முற்றாய் மறுக்கவும் முடியாது. சமீபத்திய சிறு பத்திரிகைகளில் உருவாகி வரும் வாசகரை மறுக்கும் எழுத்துக்களையும் முற்றாக மறுக்க முடியாது. இரண்டையும் விமர்சித்து ஆரோக்கியமான கூறுகள் இரண்டிலிருந்தும் எடுக்கப்பட வேண்டும்'—படிகள்.