பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

247


வணிகப் பத்திரிகைகள் பலவற்றினது உண்மைத் தன்மையையும் 'மசாலாப் பத்திரிகைகள்' என்ற தலைப்பில் சுட்டி வெளியிட்டு வாசகர்களைப் பெரிதும் ஈர்த்தது. அதேபோல் பிரசித்தி பெற்ற எழுத்தாளர்கள் பற்றியும் எழுதியது. சினிமா உலகப் பிரமுகர்கள் பற்றி கட்டுரைத் தொடர்கள் இதில் வெளிவந்துள்ளன. சமூக, அரசியல் துறைகளில் மலிந்துவிட்ட ஊழல்கள், குறைபாடுகள் பற்றிச் சிறு சிறு கட்டுரைகளும் தகவல்களும் வருகின்றன. கிண்டலும், பரிகாசமும் கலந்த கவிதைகள், குறிப்புகள் சுட்டியில் அதிகம் காணப்படும். வீட்டு வைத்தியம், மனித உடல் உறுப்புகள் பற்றிய மேலோட்டமான கட்டுரைகள், புத்தகங்கள் பற்றிய செய்திகள் தொடர்ந்து வருகின்றன.

வரவர 'சுட்டி' துணுக்குகள்—பிற பத்திரிகைகளிலிருந்து 'நன்றி' யுடன் எடுத்துப் பிரசுரிக்கும் புதுமையான, ரசமான, சூடான, சுவையான தகவல்கள் முதலியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது தெரிகி றது. சாதாரணமான கதைகளும் சுட்டியில் வெளிவரும்.

ஆரம்ப காலத்தில் 'சுட்டி' யின் துணிச்சலான போக்கினால் தாக்கம் பெற்ற இளைஞர்கள், தமிழகத்தில் வெவ்வேறு பகுதிகளில், சுட்டி மாதிரி பத்திரிகைகள் தொடங்குவதில் முனைப்புக் கொண்டார்கள். அம்முயற்சிகள் பலவும் ஒரு சில இதழ்களோடு முடிந்து போயின.

‘மன ஓசை' மாதிரி புதிய கலாசாரம் என்றொரு தீவிர ஏடு வந்து கொண்டிருக்கிறது. இதன் தீவிரப் போக்கு இளைஞர்களுக்கு உற்சாகம் அளிக்கிறது. இது பற்றி ஈடுபாட்டுடன் பேசி மகிழ்கிறார்கள்.

இன்றைய நிலைமைகளில் அதிருப்தி கொண்ட இளைஞர்கள் புதுமை வளர்ச்சிக்கும் சமூக மாற்றத்துக்கும் வாழ்க்கை நலனுக்கும் தங்களால் இயன்றதைச் செய்ய வேண்டும் என்ற துடிப்புடன் செயலாற்றுவதில் ஈடுபடுகிறார்கள். ஒரு அமைப்பு ஏற்படுத்திக் கொண்டு கூட்டங்கள், பட்டிமன்றங்கள், கருத்து அரங்குகள் நடத்திக் கருத்துப் பரிமாற்றங்கள் செய்வதோடு தங்கள் எண்ணங்களை வெளியிடுவதற்காக ஒரு பத்திரிகையும் நடத்துகிறார்கள்.

இவ்வகையான சிற்றேடுகள் அவ்வப்போது வெவ்வேறு இடங்களில் தோன்றி வெளிவந்திருக்கின்றன.

கோயம்புத்துரில் 'இலக்கிய இயக்கம்' இப்படிச் செயல் புரிந்த