பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

250

வல்லிக்கண்ணன்


நம்பிக்கையுடன்தான் நாங்கள் எழுதத் துவங்கியிருக்கிறோம். மக்கள் கலாச்சாரம் மலரச் செய்யும் மகத்தான நோக்கோடு, இலட்சியத் கனல்களால் எங்கள் எழுத்துக்கள் எழுகின்றன. நாளைய இலக்கியப் பாதைக்கு இன்று ஒரு புதிய அஸ்திவாரம் போடுகிறோம்.

நிகழ்காலப் பிரச்னைகளை மறந்த கற்பனைகள் எங்களுக்கு வேண்டியதில்லை. ஒரு புதிய உலகைப் படைக்கும் உத்வேகமுள்ள கருத்துக்களே எங்களுக்குத் தேவை.‘

இப்படி ‘செந்தூரம்‘ முதலாவது இதழில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலக்கியம் யாருக்காக, இலக்கியமும் வாழ்க்கையும் என்பன போன்ற சிந்தனைக் கட்டுரைகள், கவிஞர் மாயகோவஸ்கி, தந்தை பெரியார், சிரிப்பு நடிகர் சார்லி சாப்ளின் பற்றிய குறிப்புகள்; கார்ல் மார்க்ஸ், மாவோ சிந்தனைகள், கதைகள், கவிதைகளும் செந்தூரம் இதழ்களில் வந்துள்ளன. தரமான திரைப்படம், நல்ல சினிமா இயக்குநர் பற்றியும் கட்டுரைகள் பிரசுரமாகியிருக்கின்றன. கவிஞர் எஸ். அறிவு மணி, கவிஞர் இன்குலாப் பேட்டிகளையும் செந்தூரம் வெளியிட்டுள்ளது.

முற்போக்கு இலக்கிய இதழ்களில், திருப்பூரிலிருந்து 1979-80களில் வெளிவந்த ‘விழிப்பு‘ என்ற பத்திரிகை குறிப்பிடப்படவேண்டியது ஆகும். மு. நடராஜன் ஆசிரியராகவும் வெளியிடுபவராகவுமிருந்து நடத்திய இப் பத்திரிகையில் முற்போக்கு இலக்கியப் படைப்பாளிகள் பலரும் எழுதி வந்தனர். வறுமையையும், வாழ்வின் வெறுமையையும், போராட்ட நிகழ்ச்சிகளையும் காட்டும் நிழற்படங்கள் அட்டைச் சித்திரமாக அமைந்து, இப்பத்திரிகைக்கு ஒரு தனித் தோற்றம் தந்தன. கடைசிக் கட்டத்தில் இது யுகவிழிப்பு என்ற பெயரைத் தாங்கி வந்தது.