பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44. சர்வோதயம்


யர்ந்த குறிக்கோளுடன் நடத்தப்படுகிற ஒரு சிறு பத்திரிகை 40 வருடங்களுக்கு மேலாகவே, கொள்கைப் பிடிப்பை விட்டுவிடாமல், தான் தேர்ந்து கொண்ட லட்சியப் பாதையில் முன்னேறப் போராடிக் கொண்டிருக்கிறது. இது வியப்புக்கும் போற்றுதலுக்கும் உரிய ஒரு சாதனைதான்.

இந்த அரிய சாதனையை நிகழ்த்திக் கொண்டிருக்கும் சிறு பத்திரிகையின் பெயர் ‘சர்வோதயம்‘. இந்த மாத இதழ் இப்போது (1985-ல்) 42-வது ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறது.

தமிழ்நாடு சர்வோதய சங்கம் என்ற அமைப்பின் சார்பில் நடை பெறுகிற ‘சர்வோதயம்‘ கிராம மேம்பாட்டிற்காகவும், மக்களின் வாழ்க்கை வளத்துக்காகவும், நாட்டின் கைத்தொழில் வளர்ச்சிக்காகவும், மனிதகுலத்தின் நலன்களை வலியுறுத்துவதற்காகவும் காந்திய—சர்வோதயக் கொள்கையைப் பரப்புவதைத் தனது குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது. இக்கொள்கை பரப்பும் ஒரே இதழாகத் தமிழகத்தில் வெளிவரும் இப் பத்திரியின் ஆசிரியர்—திரு. வெ. இராமச்சந்திரன்.

இவர் தமிழ்நாடு சர்வோதய சங்கத்தின் முன்னாள் தலைவரும், அகில இந்திய காதிக் கமிஷனின் முன்னாள் செயலாளரும் ஆவார். தொழில் துறை, பொருளாதாரம், சமூகவியல், கல்வித் துறை முதலிய பல விஷயங்களில் அக்கறையும் ஆர்வமும், அறிவுத் தேர்ச்சியும், தெளிந்த சிந்தனையும், அச்சிந்தனையை விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துச் சொல்லும் ஆற்றலும் இவர் பெற்றுள்ளார். சர்வோதயம் இதழ்களில் இவர் எழுதும் கட்டுரைகள் இவருடைய திறமைக்கும் உழைப்புக்கும் சான்றுகளாக விளங்குகின்றன.

கிராமப் பொருள்கள் வளர்ச்சியை முக்கியமானதாகக் குறிப்பிடும் சர்வோதயம், காந்திய வழியை—காந்திய தத்துவத்தை, அதன் உயர்வை எடுத்துக் கூறுகிறது. தனிமனித ஒழுக்கம், நேர்மை, சத்தியம், அயராத உழைப்பு, சுய கட்டுப்பாடு முதலியவற்றின் அவசியத்தைச் சுட்டிக் காட்டுகிறது. அதற்கேற்ற சான்றோர் வாக்குகள், அறிஞர் பொன்மொழிகள்,