பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

276

வல்லிக்கண்ணன்


தமிழ்ப் பணி : கவிஞர் வா. மு. சேதுராமன் சிறப்பாசிரியராகப் பொறுப்பு வகித்து நடத்தும் மாத இதழ். இது மரபுக் கவிதைக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. வா. மு. சே. யின் கவிதைகள் மற்றும் பல கவிஞர்களின் படைப்புகள் அதிகமாக இடம் பெறும் இப்பத்திரிகையில் பேராசிரியர் டாக்டர் சஞ்சீவி, தில்லைநாயகம், நாரண துரைக்கண்ணன் போன்ற பிரபலஸ்தர்களின் கட்டுரைகள் வெளிவருகின்றன. நூலகம் பற்றிய விசேஷக் கட்டுரைகள், மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் எழுத்துக்கள், தமிழின் சிறப்பை வலியுறுத்தும் கட்டுரைகள் தமிழ்ப் பணியில் பிரசுரம் பெற்றுள்ளன. புதுக் கவிதையை எதிர்த்து டாக்டர் தமிழண்ணல் எழுதிய கட்டுரைகள் இதில் தொடர்ந்து வந்தன. -

மரபுக் கவிதையைப் போற்றி வளர்க்கும் பத்திரிகைகளில் ‘முல்லைச் சரம்‘ முக்கியமானது. கவிஞர் பொன்னடியான் கருத்துடன் வளர்த்து வரும் இந்தப் பத்திரிகை பல வருடங்களாக மரபுக் கவிதைக்குப் பணியாற்றுகிறது. கவிஞரின் உணர்ச்சி பூர்வமான, கருத்து நயம் நிறைந்த கவிதைகள், இக்கவிதை ஏட்டுக்குத் தனிச் சிறப்புத் தருகின்றன. கவிதை எழுதும் ஆற்றல் பெற்ற பலரது படைப்புக்களைத் தாங்கி வருகிற முல்லைச்சரம் திறமையுள்ள இளம் கவிஞர்களையும் அறிமுகம் செய்து, வளர்ச்சிக்குத் துணை புரிகிறது.

பத்திரிகை நடத்துவது சிரமமான காரியம், நிச்சயமாக நஷ்டத்தை உண்டாக்கும் பணி என்று தெரிந்தும் கூட, புதிது புதிதாகப் பத்திரிகைகள் ஆரம்பிக்கும் முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டேயிருக்கின்றன. சிறு பத்திரிகைகளும் புதுசு புதுசாகத் தோன்றியவாறு இருக்கின்றன.

இவற்றில் பெரும்பாலானவை வெறும் ஆர்வத்தின் வெளிப்பாடுகளாகவும், இளம் எழுத்தாளர்களின் ஆசை மலர்ச்சிகளாகவுமே அமைகின்றன. இவை வெளியிடுகிற புதுக் கவிதைகளில் பெரும்பாலும் புதுமையும் இருப்பதில்லை; கவிதைத் தன்மையும் காணப்படுவதில்லை. கதைகளிலும் தரமோ நயமோ இல்லை.

எனினும் அபூர்வமாகச் சில முயற்சிகளில் முதல் இதழே பாராட்டத் தகுந்த சிருஷ்டிகளாக அமைந்து காணப்படுகின்றது. அப்படிப்பட்ட புது முயற்சிகளில் ‘லயம்‘ என்பதும் ஒன்று. இந்த ‘காலாண்டிதழ்‘ பெரியார் மாவட்டம் அந்தியூர் அருகில் உள்ள நகலூரில், கே. ஆறுமுகம் என்ற