பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

282

வல்லிக்கண்ணன்


கேரளக் கவிஞர் சச்சிதானந்தம் கவிதை—புவியரசின் தமிழாக்கம், வித்யா ஷங்கர், பக்தவத்சலம், ஆத்மா கவிதைகள் அநேகம். மற்றும் கல்யாண்ஜி கவிதை, விக்ரமாதித்யன் கவிதை; சுப்ரபாரதி மணியன் கதை முதல் இதழில் இடம் பெற்றுள்ளன.

முதல் பக்க சுய விமர்சனம் சுவாரஸ்யமாக இருக்கிறது.

‘இதுபோன்ற சிறு பத்திரிகைகள் தோன்றுவதும் மறைவதுமாய் இருக்கின்ற இந்தக் காலச் சூழலில் இப்படியொரு பத்திரிகையைத் திடீரென ஆரம்பிக்க வேண்டிய அவசியமென்ன ? சூத்ரதாரி புதியதாக என்ன சாதிக்கப் போகிறான்? இது தொடர்ந்து வருவதற்கான சாத்தியங்கள் உள்ளனவா ? என்பன போன்ற கேள்விகள் எங்களுக்குள்ளேயே விசுவரூபமெடுத்துத் தலையைத் தட்டி கேட்கப்பட்டவைகள்தான்.

வெளிவந்த எந்த ஒரு சிறு பத்திரிகையும் வெளியீட்டு அளவில் நின்று போயிருக்கலாமே தவிர, நீண்ட காலத்திற்கு வாசகர்களால் நினைக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது அது சிரஞ்சீவித்தனம் அடைந்து விடுகிறது. சிறு பத்திரிகைகளுக்கு என்றும் அழிவில்லை. வாழைக் கன்று மாதிரி ஒன்று வளர்ந்து மறையும்போது புதிதாக ஒன்று குருத்து விட்டிருக்கும். சூத்ரதாரிகூட அப்படி முளைத்ததாக இருக்கலாம். இது நின்றுபோனால் கூட இதன் பாதிப்பில் வேறு ஏதேனும் பத்திரிகையொன்றும் எங்காவது தோன்றலாம்.

சூத்ரதாரி எதைச் சாதிக்க எண்ணியுள்ளானோ, அதையே சாதிக்கும் எண்ணத்துடன் சில பத்திரிகைகள் வந்து கொண்டுதாணிருக்கின்றன. பிறகு இது எதற்கு என்ற கேள்வி எழலாம். நல்ல விஷயங்களைப் போட்டி போட்டுக் கொண்டு செய்வதிலொன்றும் தவறில்லையே. மேலும், சிறு பத்திரிகைகள் விஷயங்களை எல்லாப் பகுதி வாசகர்களிடமும் கொண்டு செல்ல முடிவதில்லை. ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே அது தன் விஷயதானத்தை வழங்க வேண்டியதாய் உள்ளது. எனவே பரவலாக அனைத்துப் பகுதி வாசகர்களிடமும் நல்ல விஷயங்கள் சென்றடைய வேண்டுமெனில் ஆங்காங்கே பரவலாக சிறுபத்திரிகைகள் தோன்ற வேண்டியது அவசியமாகின்றது.

நல்ல வாசகனுடைய கடமை தரமான பத்திரிகைகளைத் தேடிப் படிப்பது. நல்ல பத்திரிகைகளின் கடமை தரமான படைப்புகளை வாசகனுக்கு வழங்குவது. இந்த நோக்கில் சூத்ரதாரி செயல்படுவான். உண்மையைத் தேடுகிறோம். உண்மையையே சொல்லுகின்றோம். இது