பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

287


உழைப்புக்கும் அடிப்படையாக அமைந்திருப்பது அவர் உள்ளத்தில் திடமாக உறைகின்ற நம்பிக்கை ஆகும்.

1983—ல் இலங்கையில் நிகழ்ந்த பயங்கரமான இனக்கலவரம் பற்றி அனைவரும் அறிவர். அச்சூழ்நிலையில்கூட ஜீவா ‘மல்லிகை’யைப் பிரசுரித்துக் கொண்டுதான் இருந்தார்.

1983 நவம்பர் மாத இதழில் அவர் இப்படி அறிவித்துள்ளார்—

‘கசப்பான பல அனுபவத் தாக்கங்களிலிருந்து நாடு கொஞ்சங் கொஞ்சமாக விடுபட்டுக் கொண்டிருக்கின்றது. விக்கித்துப்போய் மலைத்துவிட்ட இலக்கிய உலகமும் சற்று மூச்சுவிட்டு நிமிரப் பார்க்கின்றது. இவை அத்தனையும் கண்டு, நாம் அதிர்ச்சியடைந்தோ, விரக்திக்குட்பட்டோ செயலிழக்கவில்லை. மல்லிகை தனது கடமையைத் தொடர்ந்து செய்வதை வாசகர்கள் பலர் நன்கு அறிவார்கள். நம்பிக்கைதான் வாழ்வின் ஜீவநாடி என்பது நமக்குத் தெளிவாகத் தெரியும்.’

சங்கடங்களை எதிர்த்து எதிர்நீச்சல் போடுவதில்தான் வாழ்க்கையின் சாராம்சமே இருக்கின்றது என்பதை நன்கு உணர்ந்தவர் டொமினிக் ஜீவா.

நிதானம் தவறாமல், அடிப்படைக் கொள்கையை விட்டுக்கொடாமல், சிந்தனைத் தெளிவுடன் அவர் எழுதுகிற எழுத்துக்கள் மல்லிகைக்குக் கனமும் தனித்தன்மையும் சேர்க்கின்றன.

‘இனவாதம் என்பது மானிடர்களுக்குப் பைத்தியம் போன்ற கடுமையான ஒரு சமூக வியாதி. வெவ்வேறு இனத்தவர்களுக்கு இடையில் உண்மையாகக் காணக்கூடியது புறம்பான சில தன்மைகளின் வேறுபாடு மாத்திரமே. உட்புறமாக அவர்களின் தேவைகள், உணர்வுகள், இன்ப துன்பங்கள், பிரச்னைகள் எல்லாம் ஒரே விதமாக இருக்கின்றன. ஒரு இனம் மற்றொரு இனத்துக்குக் காட்டும் பகையான மனப்பான்மைக்கு முக்கிய காரணம், உட்புறமாக அவர்களை அறிந்து கொள்ளாமை என்று கூறலாம். அவ்வகையான அறிந்து கொள்ளலை மிகச் சுலபமாகப் பரிமாறுதலுக்கு வழி இலக்கியமே.‘

இவ்விதம் மல்லிகையில் ஜீவா தெளிவுபடுத்தியிருக்கிறார். அவ்வகையான அறிந்து கொள்ள உதவும் கதைகள், கட்டுரைகளை,