பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

290

வல்லிக்கண்ணன்


‘மல்லிகை’ அவ்வப்போது சில சிறப்பிதழ்களை உருவாக்கியது. திக்கு வல்லைச் சிறப்பிதழ், நீர் கொழும்புச் சிறப்பிதழ், மலையகச் சிறப்பிதழ், முல்லைத்தீவுச் சிறப்பிதழ் ஆகியவை இத் தன்மையன.

மல்லிகையின் ஒவ்வொரு ஆண்டுமலரும் வாசகர்களுக்கு நல் விருந்து ஆகும்.

‘மல்லிகை வெறும் இலங்கைச் சஞ்சிகையல்ல. அது தமிழ்கூறும் நல்லுலகம் அனைத்தையும் அரவணைத்துப் போகும் மாசிகை’ என்பதை அதன் இதழ்கள் நிரூபிக்கின்றன.

‘எமக்கு வெகு தெளிவாகவும் துல்லியமாகவும் ஒன்று தெரியும். சரித்திரத்தில் பேசப்படப் போகும் சஞ்சிகை மல்லிகை. நாமும் மல்லிகையின் சுவைஞர்களான நீங்களும் மறைந்துபோன பின்னரும் நின்று நிலைத்துப் பேசப்படப்போகும் மாசிகை மல்லிகை. மல்லிகையை ஆராய்ந்து கலாநிதிப் பட்டம் வாங்கக்கூடிய ஒரு காலம் வரத்தான் போகின்றது. அப்படியான நெடுந்தொலைவுப் பார்வையுடனேயே நாம் இன்று செயல்பட்டு வருகிறோம்.’

—இப்படி அறிவிக்கிறார் மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா.

இதிலும் அவருடைய தீவிரமும் உறுதியும் நிறைந்த நம்பிக்கையே மேலோங்கி ஒலிக்கிறது.