பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

296

வல்லிக்கண்ணன்


யாழ்ப்பாணம் இ. செ. கந்தசாமி 1967-ல் ’வசந்தம்’ மாத இதழை ஆரம்பித்தார். ’ஈழத்துக் கலை இலக்கியத் துறையில் முற்போக்கான பாதையில்’ செல்கின்றோம் என்று அறிவித்தது அது. தமிழ்நாட்டிலிருந்து கட்டுப்பாடினிறி இறக்குமதியாகி, இலங்கை வாசகர்களின் மனசையும், இலங்கைப் பத்திரிகைகளையும் வெகுவாகப் பாதித்துத் தீமைபுரியும் ’தமிழ்ப் பத்திரிகைக் குப்பைகளுக்கு’ பலத்த எதிர்ப்பு தெரிவித்தது வசந்தம். இளைய எழுத்தாளர்களின் கதை கவிதைகளுடன், லூ சூன் போன்ற முற்போக்கு இலக்கிய ஆசிரியர்களின் படைப்புகளை மொழிபெயர்த்தும் பிரசுரித்தது.

’புரட்சிகர சிந்தனையாளர்களின் எழு (த்துக்)களம் என்று கூறியவாறு புத்தளம் மன்னார் வீதியிலிருந்து ’பொன்மடல்’ வந்தது.

’அக்னி’ என்ற சிற்றேடு மனிதாபிமானப் படைப்பாளிகளின் முற்போக்குச் சிந்தனைக்களம் ஆகச் செயல்பட்டது.

1971—ல் ’கற்பகம்’ தோன்றியது. ‘வண்மையுடையதொரு சொல்லினால்—உங்கள் வாழ்வு பெற விரும்பி நிற்கிறோம்’ என்ற பாரதி வாக்கை இலட்சிய வரிகளாகத் தாங்கி வந்தது. கலை, இலக்கியம், அறிவியல், பொருளாதாரம் போன்ற பல துறைகளிலும் கவனம் செலுத்திய கற்பகம், ‘ஈழத்து மண் வாசனையையும் சாதாரண விவசாய, தொழிலாள மக்களுடைய வாழ்க்கை முறையையும் கருத்திற்கொண்டு ஆற்றல் இலக்கியங்கள் படைக்கப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தியது.

களனி : ’நூறு சிந்தனை மலரட்டும் நாறும் கீழ்மைகள் தகரட்டும்’ என்ற கொள்ளை முழக்கத்துடன், யாழ்ப்பாணத்தில் 1973—ன் பிற்பகுதியில் தோன்றியது.

’தேசத்தின் முற்போக்கு இலக்கியம் மட்டுமல்ல முழு முற்போக்கு இயக்கமுமே பின்னடிக்கப்பட்ட நிலையில், ஒரு விவசாயப் பிரதேசமான கிளிநொச்சியை நிலைக்களமாகக் கொண்டு’ களனி தீவிரமாகச் செயல்பட முயன்றது. ஆயினும், 1975—ன் முற்பகுதிவரை நான்கே நான்கு இதழ்களைத்தான் கொண்டுவர முடிந்தது இலக்கிய உற்சாகிகளினால்.

1976—ல் களனி மீண்டும் ’ஊற்றுக்கண்களைத் திறக்க’ முற்பட்டது. ‘வைரம் பாய்ந்த தனது கொள்கைக் கால்களில் ஊன்றி நின்று, ஈழத் தமிழ் இலக்கியப் பரப்பு ஏற்றமுற வளமூட்டும் நூறு பூக்கள் மலரட்டும்,