பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

328

வல்லிக்கண்ணன்


ஜனரஞ்சகமான வணிகப் பத்திரிகைகளை விற்பனை செய்கிற ஏஜண்டுகளைத்தான் சிறு பத்திரிகைகளும் நாடவேண்டியிருக்கிறது. ‘பெரிய பத்திரிகைகள்’ வாரம்தோறும் இருநூறு— முந்நூறு (அதற்கும் அதிகமாகவும்) பிரதிகள் செலவாகக் கூடிய ஊர்களில், கனமான— சிந்தனைக்கு உரிய— ’சீரியஸ்’ தன்மை உள்ள கதைகள், கட்டுரைகள், கவிதைகளைப் பிரசுரிக்கிற சிற்றேடுகள் மாசத்துக்கு இருபது அல்லது முப்பது பிரதிகளே விலை போகின்றன. இதனால் வியாபாரிக்கு அதிகமான லாபம் இல்லை. அவர் கவனமும் சிரத்தையும் அதிகக் கமிஷன் கிடைக்க வகை செய்கிற வணிகப் பத்திரிகைகளை விற்பதிலும், அவற்றின் விற்பனைத் தொகையை உடனுக்குடன் அனுப்பி வைப்பதிலும் தீவிரமாக இருக்கின்றன.

எனவே, தபால் மூலம் வரப் பெறுகிற சிறு பத்திரிகைகளை வியாபாரி எடுப்பாக, வாங்க வருகிறவர் பார்வையில் படும்படியாக, முன்னே வைப்பதில்லை. சில சமயம், அந்தப் பத்திரிகை இருக்கிறதா என்று கேட்டு வாங்க வருகிற வாசகருக்கு எடுத்துக் கொடுக்கவும், உரிய பதிலைச் சொல்லவும்கூட, உற்சாகம் இல்லாதவர் ஆகிவிடுகிறார் கடைக்காரர். விற்பனைத் தொகை சிறு அளவாக இருப்பதால் அதை மாதம்தோறும் அனுப்ப மனம் வருவதில்லை அவருக்கு அனுப்புகிற செலவு குறையுமே என்பதற்காக, இரண்டு மாதம் மூன்று மாதம் சேர்த்துப் பணம் அனுப்பலாமே என்று லாபத்தில் குறியாக உள்ள வியாபாரி நினைக்கிறார். இப்படிப் பல மாதங்கள் ஆகிவிடவும், பணம் அனுப்புவது அவருக்குச் சிரமமாகி விடுகிறது; அனுப்பாமலே இருந்து விடுகிறார்.

எந்த வகையில் பார்த்தாலும் பத்திரிகைக்குத்தான் நஷ்டம் ஏற்படுகிறது.

தொழில் முறை ஏஜண்டுகளை நம்பாமல் இலக்கிய ரசனையும் ஈடுபாடும் கொண்ட நண்பர்களுக்கு 10 பிரதிகள் ( சில ஊர்களுக்கு 5 பிரதிகளாவது) அனுப்பி, பத்திரிகையைப் பரப்புவதற்கு முயற்சி பண்ணலாமே என்று சிறு பத்திரிகை நடத்துகிறவர்கள் சோதனையில் ஈடுபடுகிறார்கள்.

உற்சாகமுள்ள நண்பர்கள் சிறிது காலம் ஒத்துழைக்கிறார்கள். போகப் போக இவர்களும் தொழில்முறை ஏஜண்டுகள் போக்கில்தான் செயல்படுகிறார்கள். ஒரு கட்டத்தில், அந்த ஊருக்கு பத்திரிகை அனுப்புவதையே நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடுகிறது.

ஊர் ஊருக்கு இப்படி ஆகி, பத்திரிகைகள் பிரதிகள் அச்சிடும் எண்ணிக்கையைக் குறைக்க நேர்கிறது. இவ்வாறு தேய்ந்து தேய்ந்து பத்திரிகை நிற்க வேண்டிய நிலையை அடைந்து விடுகிறது.

தமிழ்நாட்டில் சிறு பத்திரிகைகளின் வரலாறு தொடர்ந்து எடுத்துக் காட்டிக்கொண்டிருக்கிற உண்மை நிலை இதுதான்.

சிறு பத்திரிகை தொடர்ந்து நீடித்து நடக்க வேண்டுமானால், தரம் அறிந்து படிக்கிற வாசகர்களின் எண்ணிக்கை பெருக வேண்டும்.